அச்சுறுத்தலுள்ள எதிர்க்கட்சியின் 22 எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு வழங்கவும்

அச்சுறுத்தலுக்குளாகியுள்ள எதிர்க்கட்சியை சேர்ந்த 22 எம்.பி.க்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதுதொடர்பான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 22பேருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கின்றபோதும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
எம்.பி.க்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென நாங்கள் பொலிஸ்மா அதிபரிம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். அதன் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு வந்த பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு தேவையான எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க தயார் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டாம் என அரசாங்கம் அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எங்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்திருப்பது, எம்மை பயமுறுத்துவதற்கா என்ற சந்தேகம் எழுகின்றது . ஏனெனில் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் அதிலும் 22 எம்.பி.க்களுக்கு கட்டாயம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் பட்டியல் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது என அரசாங்கம் தீர்மானித்திருப்பதால், அந்த தீ்ர்மானத்துக்கு அப்பால் சென்று எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என பொலிஸ்மா அதிபர் சபாநாயகருக்கு முன்பாக்க தெரிவித்தார். இந்த நடவடிக்கை பிழையென நாங்கள் பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டினோம்.ஏனெனில் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது,அரசியல்வாதிகள் அல்ல, பொலிஸும் இராணுவமுமாகும். இதனை அரசியல் தலைவர்களின் தீர்மானத்துக்கு அடிபணிய வைக்க முடியாது. அரசாங்கம் எடுத்திருப்பது தவறான தீர்மானம்.
எனவே 22 எம்.பி.க்களுக்கு கட்டாயம் பாதுகாக்கு வழங்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கும்போது, அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றது எனவே எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் , அதுதொடர்பான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
![]()