உலகம்

‘காசா சர்வதேச படை’யில் பங்கேற்க அமெரிக்கா 70 நாடுகளுக்கு அழுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்தின் ஓர் அங்கமாக காசாவில் சுமார் 10,000 சர்வதேச படைகளை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முயன்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சர்வதேச படையில் இணைவதற்கு சுமார் 70 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தபோதும், இதுவரை குறைந்த அளவே வெற்றி கிடைத்திருப்பதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மோல்டா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் எல் சால்வடோர் போன்ற நாடுகளுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

2026 இறுதியில் 10,000 சர்வதேச படைகளை நிலைநிறுத்த எதிர்பார்த்தபோதும் அமெரிக்காவால் 8,000 இற்கு மேற்பட்ட படைகளை திரட்ட வாய்ப்பு இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற பல மத்திய கிழக்கின் அமெரிக்க கூட்டணி நாடுகள் காசாவில் சர்வதேச படைகளை நிலைநிறுத்துவதற்கான நிதியை திரட்டுவதில் ஏற்கனவே அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இதுவரையில் 70 நாடுகளில் 19 நாடுகள் மாத்திரமே இதற்காக உபகரண, ஏற்பாட்டியல் மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்க விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக மேற்படி பத்திரிகைக்கு குறித்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசாவில் நிலைநிறுத்த திட்டமிடப்படும் இந்த சர்வதேச படை, அங்குள்ள பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸின் ஆயுதக் களைவு பணியில் ஈடுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதால் பல நாடுகளும் தமது படையை அங்கு அனுப்புவதில் அச்சம் அடைந்துள்ளன.

இந்த ஆயுதக் களைவு விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆயுதங்களை கைவிடுவதற்கு ஹமாஸ் கண்டிப்பான நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதற்கு பதில் ஆயுதங்களை முடக்கி வைப்பதற்கான சாத்தியத்தை ஹமாஸ் நிராகரிக்கவில்லை.

ஹமாஸ் மூத்த உறுப்பனரான காலித் மஷால் கடந்த வாரம் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய போட்டியில், ‘முழுமையான ஆயுதக் களைவு என்ற கருத்தை போராட்டத்தால் (ஹமாஸ்) ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

‘இந்தக் கருத்தையே நாம் மத்தியஸ்தர்களுடன் பேசி வருவதோடு நடைமுறைக்கு ஏற்ற அமெரிக்க சிந்தனையுடன்… அத்தகைய தொலைநோக்குப் பார்வையை அமெரிக்க நிர்வாகத்துடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைவதற்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நிலைநிறுத்தப்படும் சர்வதேச படையின் முக்கிய பணியாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதங்களை களைவது இருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கடந்த ஒக்டோபரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அமைதித் திட்டத்தின் பணிக் குழுவில் பங்கேற்பதற்கு விருப்பத்தை வெளியிட்டிருக்கும் நாடுகள் ‘மஞ்சள் எல்லைக் கோடு’ என அழைக்கப்படும் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குள் செயற்படுவதற்கே விருப்பத்தை வெளியிட்டுள்ளன.

காசாவை இரண்டாக பிரிக்கும் இந்த மஞ்சள் கோட்டை தாண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி போர் நிறுத்த காலத்தில் பலஸ்தீனர்கள் பலரை இஸ்ரேலியப் படை சுட்டுக் கொன்றுள்ளது. இந்த எல்லைக் கோடு தொடர்பில் பலஸ்தீனர்கள் இடையே அச்சம் நிலவுவதோடு அது நிரந்தர எல்லையாக மாறக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். காசாவில் பாதிக்கும் அதிகமான நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இந்த சர்வதேச படை காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் செயற்படுவதற்கு அமெரிக்கா வலிறுத்தி வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைதி காக்கும் படை காசாவின் பதுகாப்பு, பலஸ்தீன பொலிஸ் படை ஒன்றுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் இஸ்ரேலின் இரண்டு ஆண்டு தாக்குதல்களால் பெரும் அழிவுக்கு உள்ளாகி இருக்கும் காசாவை மீள கட்டியெழுப்புவதை மேற்பார்வையிடல் போன்ற பணிகளுக்கு பொறுப்பாக இருக்கும்.ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட காசா தொடர்பான டிரம்பின் அமைதித் திட்டத்தில் சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவதுடன் அங்கு நிலைமாற்று நிர்வாகம் ஒன்றையும் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சர்வதேச படை அடுத்த மாத ஆரம்பத்தில் காசாவில் நிலைநிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கடந்த வாரம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இந்தப் படையின் கட்டமைப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடுத்த வாரம் 25 இற்கு மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கட்டார் தலைநகர் டோஹாவில் ஒன்றுகூட இருப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி தொடக்கம் போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 391 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *