இலங்கை

ஜனவரிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்க தயாராகும் எதிர்க்கட்சி!

பாராளுமன்றத்தை ஜனவரி மாதத்திற்கு முன்னர் கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கையொப்பத்துடன் பிரதமரிடத்தில் இது தொடர்பான கடிதத்தை கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு பின்னர் ஜனவரி 6ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரவு செலவுத் திட்ட இறுதிநாள் விவாதத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி தற்போதைய அனர்த்த நிலமைகளை தொடர்ந்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் 50 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் இதன்படி ஜனவரி 6ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட பாராளுமன்றத்தை, அவசரகார சட்டத்தின் கீழ் கூட்டுவதற்கு பிரதமருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதன்படி 19ஆம் திகதி குறைநிரப்பு மதிப்பீடுகளை நிறைவேற்றுவதற்காக கூட்டுமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் 19ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் இதுவரையில் எந்தவித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும் அனர்த்த நிலைமைகள் மற்றும் மக்களுக்கான நிவரண பணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், இதனால் ஜனவரி 6ஆம் திகதிக்கு முன்னர் அதற்காக பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *