இலங்கை

மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயமுள்ள 15,000 இடங்கள் அடையாளம்

மலையகம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயமுள்ள 15,000 வரையிலான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ள வட கிழக்கு பருவக்கால மழையால் அனர்த்தங்கள் நிகழலாம் என அடையாளம் காண்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கையெடுத்துள்ளது.

இதன்படி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களின் 40 செயலக பிரிவுகளை சேர்ந்த மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் 10 நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பிரதேச செயலகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த மாவட்டங்களில் அண்மையில் டித்வா புயலின்போது மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையால் ஏற்கனவே பெருமளவிலான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக மேலும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடித்தல் அறிவிப்புக்கமைய கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் பல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயத்திற்கான மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தில் ஏற்கனவே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பன்வில, தொலுவாவ, குண்டசாலை, மினிப்பே, தெல்தொட்ட, உடுநுவர, பகததும்பர, அக்குரண, உடுதும்பர, யட்டிநுவர, அரிஸ்பத்துவ, உடபலாத உள்ளிட்ட பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தில் மாவனெல்ல, வரகாபொல, கேகாலை, புலத்கொகுபிட்டி, அரநாயக்க, ரம்புக்கனை, கல்கமுவ மற்றும் கலிகமுவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கான சிவப்பு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குருநாகல் மாவட்டத்தில் பொல்காவெல, நாரம்மல, மாவத்தகம, அலவ்வ மற்றும் ரிதிகம ஆகிய பிரதேசங்களிலும் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல்ல, லக்கல பல்லேகம, ரத்தோட்டை, யடவத்த, மாத்தளை, வில்கமுவ, நாவுல மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்டி, கேகாலை, பதுளை, மாத்தளை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் டித்வா புயலின் போத இடம்பெற்ற பாரிய மண்சரிவுகளில் சிக்கி 630க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 190க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் மண்சரிவு இடம்பெற்றுள்ள பகுதிகளில் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயங்கள் நிலவுவதாகவும், இதனால் அந்தப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாவட்டங்களில் மண்சரிவுகளால் வீடுகளை இழந்தவர்கள் மாத்திரமன்றி மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் பிரதேச பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் மற்றும் பொதுக் கட்டிடங்களிலும் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளுக்கு செல்வது ஆபத்தானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டில் பல மாவட்டங்களிலும் தேசிய கட்டிட அகழ்வாராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாயமுள்ள சுமார் 15,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வாறு ஆபத்தமிக்க இடங்களில் 5000 வரையிலான குடும்பங்கள் வசிக்கும் நிலையில் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *