இலங்கை

யாழ். பல்கலை.துணைவேந்தர் தெரிவின் போது நேர்மையுடன் செயற்படுங்கள்: நீதியாகப் புள்ளியிடுங்கள் பேரவை உறுப்பினர்களுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் நியமனத்துக்காக மூன்று பேரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடைபெறவுள்ள யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டத்தின் போது தகுதி, திறமையின் அடிப்படையில் உறுப்பினர்கள் இதய சுத்தியுடன் – நேர்மையாகப் புள்ளிகளை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைவேந்தர் தெரிவு முறை பற்றிய சுற்றறிக்கை பற்றி ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று நேற்று, திங்கட்கிழமை காலை 11 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்ட பேரவை (வெளிவாரி) உறுப்பினர்கள் பலர் உட்பட பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் செயலாளர் மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

புள்ளியிடலில் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையிலேயே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்று யாழ். பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், வழமை போலத் துணைவேந்தர் தெரிவினை எதிர்நோக்கும் ஏனைய பல்கலைக்கழகங்களின் பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களுடன் நடாத்தப்பட்ட சந்திப்பு போன்றதே இந்தச் சந்திப்பு என்று ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

வேறு சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தெரிவில் ஏற்பட்டமை போன்ற சிக்கல் நிலைமைகள் தவிர்க்கப்படுவதற்காகவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பாக சுற்றறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் பற்றிய தெளிவூட்டல்களை வழங்கியது எனவும், வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கு முன்னராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இத்தகைய சந்திப்புகள் நடத்தப்பட்டமையையும் அவ்வாட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

நேற்றைய சந்திப்பின் போது, துணைவேந்தர் தெரிவு தொடர்பாகச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், தெரிவுச் செயன்முறையின் போது உண்மைத் தன்மையையும், நேர்மைத் தன்மையையும் பிரதிபலிக்குமாறு சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்ட வழிப்படுத்தல்களை கவனத்திற்கொண்டு புள்ளியிடல் மற்றும் மற்றைய செயன்முறைகளை செய்யுமாறும் பேரவை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத் தெரிவின் போது பின்பற்றப்பட வேண்டிய சில நடைமுறைகள் குறித்துப் பேரவை உறுப்பினர்களும் தமது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவரால் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள பீடாதிபதி ஒருவரின் நியமனம் குறித்தும், அப் பீடாதிபதியின் மதிப்பீட்டு உரிமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பல்கலைக்கழகத்தின் உள்வீட்டுப் பிரச்சினையை அந்தப் பல்கலைக்கழகமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழு உறுப்பினர்களுக்குதத் தெளிவுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தின் போது,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காட்டிய வெளிப்படைத் தன்மையான அணுகுமுறையையும், உரிய செயன்முறைகளில் காட்டிய அக்கறையையும் பேரவை உறுப்பினர்கள் சிலர் கூறினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவை முன்னிட்டு பேரவை விசேட கூட்டத்துக்காக இன்று 9 ஆம் திகதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அவதானியாக மூத்த கல்விமான்களில் ஒருவரும், பல்கலைக்கழகமொன்றின் முன்னாள் துணைவேந்தருமாகிய ஒருவர் நியமிக்கப்பட்டு அவரது பிரசன்னத்தில் இன்றைய விசேட பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த 7 பேரில் மூவரது பெயர்கள் அவர்கள் பெற்ற புள்ளியின் திறமை ஒழுங்கு வரிசையில் சிபார்சு செய்யப்பட்டு விரைவாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக சட்டங்களில் குறிக்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி ஆணைக்குழுவின் சிபாரிசுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும். பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் படி புதிய துணைவேந்தரை ஜனாதிபதி நியமிப்பார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *