இலங்கை

நாளை புதிய துணைவேந்தர் தெரிவு நடைபெறுகையில் இன்று;  யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்த மானியங்கள் ஆணைக்குழு!; கற்றறிந்தோர் பெரும் சந்தேகம் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கேற்ற வகையில், மூன்று பேரைத் தெரிவுசெய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் நாளை 9 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள்(வெளிவாரி) அனைவரையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சந்திப்பொன்றுக்காக அழைத்திருப்பது பல்கலைக்கழக சமூகத்தினரிடம் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பிலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பலரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்வதற்காக,புள்ளியிடவுள்ள மேற்படி பேரவை உறுப்பினர்களை மாத்திரம் தனியாகச் சந்திப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருப்பதன் மூலம் மதிப்பீட்டில் செல்வாக்குச் செலுத்த அல்லது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான முயற்சியாக அது இருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, வேறொரு பல்கலைக்கழகத்தில் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய நடத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவின் போது பேரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாமல், துணைவேந்தர் பதவிக்கு மீள் விண்ணப்பம் கோருமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளமை, பல்கலைக்கழகங்கள் மற்றும் பேரவைகளின் சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குட்படுத்தும் செயல் என்று அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் பகிரங்கமாகத் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், அந்தப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் தொடர்ச்சியாகக் கற்பித்தல் நடவடிக்கைகளையும் புறக்கணித்துள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களை அழைத்த ஆளும் தேசிய மக்கள் சக்தியில் மேல்மட்ட அரசியல்வாதி ஒருவர் எதிர்வரும் துணைவேந்தர் தெரிவில் தாம் குறிப்பிடும் நபருக்கே அதிக புள்ளிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைப் போலவே எமது பேரவை உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்துத் தமது அரசியல் இருப்புக்கு ஏற்ற ஒருவருக்குப் புள்ளியிடுமாறு அழுத்தத்தைப் பிரயோகிக்கக்கூடும் என்று தாம் சந்தேகிப்பதாகப் பெயர் குறிப்பிடவிரும்பாத பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களில் வினவிய போது, துணைவேந்தர் தெரிவு நடைமுறைகளின் போது சில பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைகளையடுத்து, சுற்றறிக்கை நியமங்கள், மதிப்பீட்டு முறைகள் மற்றும் புள்ளியிடல் குறித்த தெளிவுபடுத்தலுக்காகவே வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களைச் சந்திப்புக்கு அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் – நாளை நடைபெறவுள்ள துணைவேந்தர் தெரிவின் போது, பீடாதிபதி ஒருவரின் வாக்குரிமையைக் கேள்விக்குட்படுத்தி உள்வாரிப் பேரவை உறுப்பினர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதன் காரணமாக நாளைய தெரிவுக் கூட்டம் குழப்பத்தில் முடிவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பீடாதிபதி குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதே பேரவை உறுப்பினர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த பேராசிரியர் ஒருவரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் நிராகரிக்க வேண்டும் என முறைப்பாடு செய்த போதிலும், விடயத்தில் தலையீடு செய்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பித்த அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படத் தகுதி உடையவர்கள் எனத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *