இலங்கை

உள்ளூராட்சி சபைகள் அங்கீகரிக்காத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது மின்சாரத்தை நிறுத்தவும்

உள்ளூராட்சி சபைகளால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையை மீளமைப்பது குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கண்டி மாவட்டச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் அவசரத் திட்டங்களின் முன்னேற்றத்தை விரிவாக மதிப்பாய்வு செய்த ஜனாதிபதி, அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் நலன் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பணியாற்றிய அரச சேவைப் பொறிமுறையை இதன்போது பாராட்டினார். அண்மைய அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையைச் சீரமைக்கும் பணிகளில், சாதாரண அரச இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டுப் பொறிமுறை அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது, அனர்த்த நிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த 28,095 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 341 இடங்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதற்கும், அவர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மிக விரைவில் மீட்டெடுப்பதற்கும் நிறுவன பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தமதுரையில் தெரிவித்தார்.

சேதமடைந்த மற்றும் இதுவரை நிறைவு செய்ய முடியாத நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகள், மின்சாரம், குடிநீர், எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம், தகவல் தொடர்பு அமைப்புகள், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்புப் பணிகளை மிக விரைவில் மீட்டெடுத்து முடிக்க ஜனாதிபதி உத்தரவிட்டார்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிறைவு நேரம் குறித்து அவர் தனித்தனியாக மதிப்பாய்வு செய்தார். வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) உத்தரவிட்ட ஜனாதிபதி, வீதி அமைப்பு நிரந்தரமாகப் புனரமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வீதி திருத்தப் பணிகளை உடனடியாக முடிக்குமாறு பணித்தார். நீண்டகால பழுதுபார்ப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெள்ளம் காரணமாக கம்பளைப் பிரதேசத்தில் குவிந்துள்ள பெரும் அளவிலான குப்பைகளை அகற்றுவதற்குத் தற்காலிக இடம் ஒன்றை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், பருவ நெற்செய்கையை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களமும் கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த திட்டத்துடன் செயற்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

அழிவடைந்த பயிர்கள், கால்நடை வளர்ப்பு, மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு உதவுவதற்காக முறையான மற்றும் விரைவான திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளைச் சென்றடையும் வீதிகளின் தடைகளை நீக்கி, திருத்தப் பணிகளை முடித்து, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதியளவில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஒரு திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

ஆபத்தான நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் 1,800 ஆகவும், பகுதிச் சேதமடைந்த வீடுகள் 13,044 ஆகவும் பதிவாகியுள்ளன. இந்த வீட்டுச் சேதங்களுக்காக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள உதவிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மீண்டும் தங்கள் சொந்த வசிப்பிடங்களில் குடியேற முடியாத மக்களுக்கு வழங்குவதற்குப் பொருத்தமான அரசாங்க காணிகளை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மத்திய மலைப் பிரதேசத்தில் இதுபோன்றதொரு அனர்த்தம் மீண்டும் ஏற்படாதவாறு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சார இணைப்புகளை வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமது உத்தரவை மீண்டும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை கமலசேவை அமைச்சர் கே.டி. லால் காந்தா உள்ளிட்ட கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்கள், முஸ்லிம் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *