இலங்கை

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக பல விடயங்களை பேசி இருக்கிறோம்;  தமிழ் அரசுக் கட்சியுடனான சந்திப்பு குறித்து சுரேஸ்

மாகாண சபைத் தேர்தலை வைக்கச் சொல்லி அதற்கான அழுத்தங்களை கொடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் நோக்கம். தேர்தல் வருமோ வராதோ தெரியாது. தேர்தல் வரும் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையிலான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கான கட்சிகள் ஒன்றுபடுவதற்கு செயற்படுவதன் மூலம் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சரியான பாதையில் திட்டமிட்டு கொண்டு செல்ல முடியும் என்ற பொதுவான கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பாக பேசக்கூடியவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு செல்வதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுடைய இருப்பை பாதுகாத்து அவர்களது கைகளில் அதிகாரம் பெறுவதற்கான ஏற்பாட்டை செய்ய முடியும் என்பதை நம்புகிறோம்.

அந்த அடிப்படையில் முதலாவதாக, கடந்த பல காலமாக மாகாண சபை தேர்தல் நடத்தப்படவில்லை என்பதும் அது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் அதற்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம்.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை முன்னெடுத்து செல்வது தொடர்பாகவும் பல விடயங்களை நாங்கள் பேசி இருக்கிறோம். அது பற்றி தொடர்ந்து கலந்துரையாடி எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொதுவான விடயத்தை முன்னெடுப்பதாக யோசித்திருக்கிறோம்.

வந்திருக்க கூடிய அரசாங்கம் கூட வெறுமனே வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தங்களை தெரிவு செய்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக தாங்கள் விரும்பியவாறு செயல்படுவது என்பது ஏற்புடைய விடயம் அல்ல.

அந்த வகையில் தமிழ் மக்களுடைய அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையில் நாங்கள் ஒருமித்து பொது விடயங்களில் ஐக்கியப்பட்டு செயல்படுவதற்கு தீர்மானத்துள்ளோம். எங்களுடன் பேச முற்படுகின்ற ஏனைய தரப்புகளுடனும் இது தொடர்பாக நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

மாகாண சபைத் தேர்தலை வைக்கச் சொல்லி அதற்கான அழுத்தங்களை கொடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தின் நோக்கம். தேர்தல் வருமோ வராதோ தெரியாது. தமிழ் மக்கள் சார்பில் தேர்தலை வைக்குமாறு அழுத்தம் கொடுப்போம். மாகாண சபை தேர்தலை வையுங்கள் என்பது எமது நிலைப்பாடு தேர்தல் வரும் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

கஜேந்திரகுமார் தரப்புடன் ஏற்கனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேசிவருகிறது. அதேவேளை தமிழரசு கட்சியும் அவர்களுடன் பேச அழைப்பு விடுத்துள்ளது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *