இலங்கையில் அண்மைக் காலங்களில் பேரழிவை ஏற்படுத்தும்; பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியங்கள்

டித்வா புயலையடுத்து ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்குகளால் நாடு பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில்,மிகக் கிட்டிய காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பையும் இலங்கை கொண்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஏற்படலாமென எதிர்பார்க்கப்படும் அனர்த்த நிலைமை தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு கீழாக அல்லது இலங்கைக்கு அண்மித்த இந்திய கவசத் தகட்டோடு சேர்ந்த மிகச் சிறிய அளவிலான நில நடுக்கங்கள் இடம்பெற்று கொண்டே வருகிறது. அதற்குக் காரணம், இலங்கைத் தட்டுகளில் ஏற்பட்டுள்ள விருத்தி அல்லது மாற்றம் எனக் கூறலாம். அண்மித்த கால நிலநடுக்க ரிக்டர் அளவுகள் குறைவுதான். ஆனால் அதிக அளவு நிகழ்வது என்பது, அதாவது 6.5 அல்லது அதற்கு மேலான ரிக்டர் அளவு நிலநடுக்கம் பாதிக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன்.
வானிலை அனர்த்தங்களோடு மட்டுமல்லாது எதிர்காலத்தில் நிலநடுக்கம் தொடர்பான அனர்த்தங்களிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு வவுனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை இங்கு குறிப்பிட முடியும்.
இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகச் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சி என்றோ ஒரு நாள் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இருப்பதற்கான அறிகுறியேயாகும்.
ஆகவே இலங்கை அரசாங்கமே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அனர்த்த நிகழ்வுக்கு பின்னர் ஏற்படும் நிலையை விட அது தொடர்பில் ஏற்கனவே மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான பாதிப்புகளை குறைக்க முடியும்.
நில நடுக்கத்திற்கு முன்னறிவிப்பு செய்வது என்பது மிக மிகக் குறைவு. முன் அறிவிப்புச் செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஒரு விடயத்தை கவனம் செலுத்த வேண்டும்.ஒரு சிறிய நடுக்கத்தை ஏற்படுத்தி விட்டு அதன் பின்னர் வருகின்ற நடுக்கமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே உலகில் எந்த நாடுகள் என்று சொன்னாலும் ஒரு விடயத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். ஒரு சிறிய அதிர்வை உணர்ந்து கொண்டால் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளிப்பகுதியில் வந்து நிற்பதன் ஊடாக ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இலங்கை மக்களை இதுவரை நிலநடுக்கம் பாதிக்கவில்லை. எதிர்காலத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நில நடுக்கம் இடம்பெறலாம் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்படுவதன் ஊடாக பெருமளவு உயிர் இழப்புகளைத் தடுக்க முடியும்.
நிலநடுக்கத்தை பதிவு செய்கின்ற நிலநடுக்க பதிவு மானியினுடைய அளவும் இலங்கையில் குறைவாக இருக்கிறது. ஆகவே அதையும் அதிகரித்து நிலநடுக்கம் தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் நிலநடுக்கத்துக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய கனிய மற்றும் சுரங்க வளப்பிரிவு,தேசிய கட்டட ஆராய்ச்சி திணைக்களம் என்பன கவனம் செலுத்தி நிலநடுக்க பதிவுகளை மானிகளை இலங்கை முழுவதும் பொருத்தி நிலநடுக்கம் தொடர்பான விடயங்களை கண்காணித்து பகுப்பாய்வு செய்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையில் நிலங்களின் தன்மைகளுக்கு ஏற்ப கட்டடத் தன்மைகளை நாங்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகள் நில நடுக்கத்தால் பாரமான பொருட்களை பயன்படுத்தி கட்டுமானத்தில் ஈடுபடுவது குறைவு. நாங்களும் அதேபோன்ற நிலைமைகளுக்கு எதிர்காலத்தில் மாறவேண்டும். இந்த நிமிடம் வரைக்கும் இலங்கையில் இருக்கின்ற எந்த கட்டிடங்களுக்கான அனுமதிகளிலும் நிலநடுக்கம் சார்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
எதிர்காலத்தில் கட்டிடம் சார்ந்த அனுமதிகளில் இந்த நிலைமைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். கட்டிடம் சார்ந்த நடைமுறைகளில் மிகப்பெரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
அனர்த்த முகாமைத்து அமைச்சு பாடசாலை மாணவர்கள், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில் மீண்டும் ஒரு பெரிய அனர்த்தத்திற்கு பின்னர் நாங்கள்மோசமான விளைவுகளுடன் அதனை புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
இதனால்,மிகக் குறைந்த காலத்தில் அரசாங்கம் தனது கொள்கை மாற்றத்தின் ஊடாக இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் – என்றார்.
![]()