தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் பெரும் பதற்றம்; கூடாரத்தை அகற்றிய பொலிஸார்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்று வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் நடவடிக்கையால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நேற்றையதினம் பூரணை தினத்தை முன்னிட்டுத் தையிட்டி திஸ்ஸ விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந் நிலையில் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் போராட்டம் இடம்பெற்ற பகுதி வீதியைத் தவிர்த்து விகாரையின் மறுபக்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந் நிலையில் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் மறுபக்கமாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். அங்குசென்ற பொலிஸார் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்துக் கோபமடைந்த பொலிஸார் கும்பலாகச் சென்று போராட்டக்காரர்கள் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரத்தை அகற்ற முற்பட்டனர். இதன்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமார் அரைமணித்தியாலம் வரை தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களைப் பொலிஸார் இடித்துத் தள்ளிவிட்டுத் கூடாரத்தை அகற்றி தமது வாகனத்தில் எடுத்துச் சென்றனர். இதனால், அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
![]()