தமிழகம் தேர்தலுக்குத் தயாராகின்றதா?…. நியூசிலாந்து சிற்சபேசன்


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஆண்டாகும். அதனால் தேர்தல் முஸ்தீபுகள் ஆரம்பமாகிவிட்டன.
தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன்போன்று அரசியல்கட்சிகள் துடிக்க ஆரம்பிக்கின்றன. மறுவளத்தில், தேர்தல் ஆணையமும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளைத் தேர்தல் ஆணையம் ஆரம்பித்திருக்கின்றது.

ஏற்கெனவே, பீகாரிலே நடைபெற்ற வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தம்” தொடர்பான பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை தொடர்பில் பல்வேறு ஆதாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. சுமார் 65 லட்சம் வரையானோர் திட்டமிட்டோ அல்லது தவறுதலாகவோ வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தம்” என்பது வழமையான நடைமுறையாகும். ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு, பல்வேறு நிர்வாகக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும், ஆட்சியிலிருந்த கட்சிகள் சட்ட ஓட்டைகளிலே புகுந்து விளையாடியிருக்கலாம். வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தம்” நடைபெறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்னும் சந்தேகமும் உண்டு.
எதுஎப்படியாகிலும், மோடி தலைமையிலான தற்போதைய அரசு, வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்த” செயற்பாட்டை ஆரம்பித்திருக்கின்றது. அதிலேகூட, அதனை நடைமுறைப்படுத்துவதிலே காண்பிக்கப்படுகின்ற “சுடுகுது மடியைப் பிடி” என்னும் வேகமே அதிகமான கவனிப்பைப் பெறுகின்றது.
![]()
இத்தகையதொரு பின்னணியிலேயே, தமிழ்நாட்டிலே ஆரம்பமாகியுள்ள வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகள், அரசியல் கட்சிகளிடையே, பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வாக்காளர் பட்டியலிலே, பிற மாநிலத்தவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன. அதன் மூலமாக, தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்படுவதான தோற்றப்பாடு தெரிகிறது.
அந்தவகையிலேயே, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அண்மைய அறிவிப்புக்கூட கவனத்தைப் பெறுகின்றது. அதிலே, 2025 ஜூலை 1ம் திகதி வெளியிடப்பட்ட பீகார் “சிறப்புத் தீவிரத் திருத்த” வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களும், தமிழ்நாட்டின் “சிறப்புத் தீவிரத் திருத்த” வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் சொல்கின்றன.
ஆக, பீகாரிகளை தமிழ்நாட்டின் வாக்களர்பட்டியலில் இணைத்துக்கொள்ளும் படிமுறையாகவே, வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தத்தை”, தமிழக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
அஃது, தேர்தல் முடிவுகளை, பரவலாக என்று இல்லாவிட்டலும், குறிப்பிட்ட பிரதேசங்களிலே மாற்றியமைக்கலாம்.
காரணம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டிலே தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது. அதிலே, பீகாரிகளின் எண்ணிக்கை இருபது லட்சம் வரையெனக் கணிக்கப்படுகின்றது.

ஒருவருக்கு “ஒருவாக்கு” என்பது அடிப்படையல்லவா?, இரண்டு வாக்குரிமையைப் பெற்றுக்கொள்வதைச் சட்டம் அனுமதிக்காதல்லவா? போன்றவை நியாயமான கேள்விகளாகும்.
ஒரு தொகுதியின் சாதாரண வாக்காளர் யார் என்பது தொடர்பில், மன்மோகன்சிங் வழக்கில், நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது.
ஆனால், குறுகியகாலத்திலே வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தத்தை” ஒப்பேற்றி,
தேர்தலையும் முடித்துவிடுகின்ற அவசரம் தெரிகின்றது. ஆற்றைத் தாண்டிய பின்னர் “அண்ணன் என்னடா?, தம்பி என்னடா?” என்ற மாதிரியாக விஷயத்தைக் கடக்கவிரும்புகின்ற எத்தனம் தெரிகிறது. அதற்கு, பீகார் தேர்தல் நல்லதொரு சாட்சியாகும்.
அதனாலேயே, வாக்காளர்பட்டியல் “சிறப்புத் தீவிரத் திருத்தம்” தொடர்பில் தமிழக அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் கவனத்தைப் பெறுகின்றன.
எதுஎப்படியாகிலும், தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தமிழக அரசியல் கட்சிகள் வேகமாகவே முன்னெடுத்துவருகின்றன.
திராவிடக் கட்சிகளை மையப்படுத்தியே தமிழக அரசியல் சுழல்கின்றது. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுமே ஓரளவு சமமான வாக்குவங்கியைக் கொண்டிருக்கின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலிலே, திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தலா 37 மற்றும் 33 சதவிகித வாக்குககளைப் பெற்றன. ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறுவதற்காகவே கூட்டணிகளை அமைக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, தற்போதுவரையில், உறுதியாகவே காணப்படுகின்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலே வெற்றி பெற்றிருக்கின்றது. அதிலே, காங்கிரஸ், இடதுசாரிகள், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் உள்ளன.
மறுவளத்தில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. அதிலே, தேசிய அளவிலே பேசப்படுகின்ற, பாரதீய ஜனதாவே பெயர் சொல்லக்கூடிய கட்சியாகும். அதுவும்கூட, மாநில அளவில் சிறுகட்சியாகவே உள்ளது. அதற்கப்பால், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜிகே வாசன் போன்றோரின் சிறு கட்சிகளும் உள்ளன. மேலதிகமாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஒ பன்னீர்செல்வம் போன்றோரும் உள்ளனர். ஆக, ஓர் டவுன்பஸ் கணக்கில் “யார் ஏறுகின்றனர்?, யார் இறங்குகின்றனர்?” என்று தெரியாத அளவிலேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி காணப்படுகின்றது.
பாட்டாளி மக்கள் கட்சி அப்பா-மகன் சண்டையில் பொழுதைக் கழிக்கின்றது. ஆனால், தேர்தல் வரும்போது ஏதோவொரு கூட்டணியில் சேர்ந்துகொள்வார்கள்.
சீமான், விஜயகாந்த் தரப்புக்களுடன், விஜய் கட்சியும் தமிழக தேர்தல் களத்தில் காணப்படுகின்றது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் விக்கிரவாண்டி, மதுரை கட்சி மகாநாடுகள் பரவலான கவனத்தை ஈர்த்ததன. கரூர் சம்பவம் பல கேள்விகளை எழுப்புகின்றது.
இவ்வாறாகவே, தமிழகம் தேர்தலுக்கு தயாராகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
![]()