இலங்கை

கண்டிக்குச் சென்ற ‘தீய சக்திகள்’ அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; பிமலின் கூற்றால் சபையில் சர்ச்சை

அனர்த்தங்களின் போது கண்டிக்கு சென்ற தீய சக்திகள் என்ற வசனங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியின் சர்வஜன பலய எம்.பியான திலித் ஜயவீர,ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களை தொடர்ந்தே இவ்வாறு திலித் ஜயவீர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, கண்டிக்கு தீய சக்தியொன்று சென்றதாகவும், அவர்கள் அரச அதிகரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்பின்னர் விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் திலித் ஜயவீர கூறுகையில்,

தீய சக்தி கண்டிக்கு சென்றுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அந்த சக்தி தீயது என்றால் அந்த குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் எந்த கட்சி பேதமும் இன்றி வடக்கு, கிழக்கு, தெற்கை சேர்ந்த எம்.பிக்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் இன்றி அங்கு சென்றோம். கண்டி மாவட்டத்திலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிந்தே சென்றோம். எமது கடமையாக நாங்கள் அங்கு சென்றோம். சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு நாங்கள் போகும் போது மாவட்ட அரசாங்க அதிபரின் ஆசனத்தில் இவர்களின் எம்.பியொருவரே இருந்தார். அவரை நாங்கள் அடையாளம் காணவில்லை. பின்னர் கலந்துரையாடும் போதே அதனை புரிந்துகொண்டோம். அரசாங்க அதிபர் வேறு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இப்படி நடக்க முடியுமா? நாங்கள் உதவி செய்வதற்காகவே அங்கு சென்றோம். எவ்வித பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக அங்கு செல்லவில்லை. நல்ல யோசனைகளையே முன்வைத்தோம். இதனை தீய சக்தியாக தீயவர்களாலேயே பார்க்க முடியும் என்றார்.

இதேவேளை இந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி எம்.பியான லக்மாலி ஹேமச்சந்திர, இந்த நேரத்தில் நவம்பர் 12ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திலித் ஜயவீரவின் ஊடகமே நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் இறந்த உடல்களின் மீதிருந்து அரசியல் செய்கின்றனர் என்றார்.

இவ்வேளையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி எழுந்த திலித் ஜயவீர, இவர் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். இதுவே தீய அரசியல் என்பது. நீங்கள் எடுத்த நடவடிக்கை தீயதே. தெரணவில் செய்து வாசிப்பவர் நானில்லையே என்றார்.

இதனை தொடர்ந்து லக்மாலி ஹேமச்சந்திர தொடர்ந்தும் உரையாற்றிய நிலையில் திலித் ஜயவீர ஒழுங்குபிரச்சினையை எழுப்பிய போதும், சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை. எனினும் திலித் ஜயவீர தொடர்ந்தும் அது தொடர்பில் கோசமெழுப்பிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் திலித் ஜயவீரவுக்கு ஒழுங்கு பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டது. இவ்வேளையில் அவர் கூறுகையில்,

இவர் கூறும் இந்த விடயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விடயமே. இது தொடர்பில் வேண்டுமென்றால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதனைவிடுத்து இவ்வாறு கூற முடியாது. இதுவே தீய சக்தியாகும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *