நாட்டை கட்டியெழுப்ப நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் நிதியத்தில் உறுப்பினர்களாக குற்றவாளிகள்

அனர்த்த நிலைக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்ப பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு நிதியம் இருக்கும் நிலையில், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நிதியம் ஒன்றை அமைத்திருக்கிறார்.அந்த நிதியத்தில் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குற்றம்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கடந்த 28ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்திய ஜனாதிபதி இந்த சட்டத்தை பயன்படுத்தி, யாரையும் பழிவாங்கும் செயலை மேற்கொள்ளப்போவதில்லை என்றார். ஆனால் அமைச்சர்கள், சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கின்றார்கள் . இது மிகவும் பயங்கரமான நிலை எனவும் கூறினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
நாட்டில் இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால், அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது.அவ்வாறு ஒரு சட்டம் இருக்கும்போது ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு, இந்த சட்டத்துக்கு அப்பால் சென்று அவர் ஒரு நிதியத்தை அமைத்துள்ளார்.அந்த நிதியத்துக்கு ஜனாதிபதி நியமித்துள்ள உறுப்பினர்களை பார்க்கும்போது, அதில் ஜனாதிபதியின் ஆலாேசகர்கள், அவருடன் இருக்கும் வியாபாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனாதிபதியின் இந்த நிதியத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில், தற்போதைய இடர்நிலை தொடர்பான விசேட நிபுணர்கள் இருக்கிறார்களா? அந்த குழுவில் வைத்தியர்கள் இல்லை. பொறியியலாளர்கள் இல்லை, குறைந்தபட்சம் கணக்காளர் ஒருவர் கூட இல்லை..ஓய்வுபெற்ற கணக்காளர் ஒருவராவது இருக்க வேண்டும். அவ்வாறான ஒருவரும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் ஒருவராவது இருக்க வேண்டும் அப்படியான ஒருவரும் இல்லை. பெண்கள் பிரதிநிதித்துவமும் இல்லை.
அப்படியானால் ஜனாதிபதி இந்த நிதியத்துக்கு நியமித்திருப்பவர்களில், வாகனம் இறக்குமதி செய்து, அதன் கொள்வனவை மாற்றியமைத்த குற்றச்சாட்டுக்கு நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறும் வியாபாரிகள் சிலரும் இருக்கின்றனர். மன்னாரில் காற்றாலையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து, சுற்றாடலை மாசுபடுத்திய குற்றச்சாட்டுக்குள்ளாகியவர்களும் இந்த குழுவில் இருக்கின்றனர். ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக இருக்கும் தம்மிக்க பெரேரா மாத்திரமே இந்த குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. அதனால் ஜனாதிபதியின் இந்த நிதியத்துக்கு இருக்கும் சட்ட அங்கீகாரம் என்ன?
மேலும் ஹெல்பிங் அம்பாந்தோட்டைக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அதேபோன்று கொரோனா காலத்தில் கோத்தாபய ராஜபக்ச ”இடுகம” என நிதியம் ஒன்றை அமைத்தார். அந்த நிதியத்துக்கு என்ன நடந்தது?அதில் தற்போது பணம் இருக்கிறதா இல்லையா? அதேபோன்று நாங்கள் யாரும் அறியாத நிதியம் ஒன்றும் இருக்கிறது.அதுதான் சுனாமி காலத்தில் அமைக்கப்பட்ட சிவப்பு நட்சத்திர காரர்களின் சுனாமி நிதியம்.அந்த நிதியத்துக்கு என்ன நடந்தது.? அதனால் நிதியங்கள் தொடர்பில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே வேறு நிதியங்களை அமைக்காமல், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம் நிதியம் அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையில் நிவாரண நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்தினார், இந்த சட்டத்தை பயன்படுத்தி, யாரையும் பழிவாங்கும் செயலை மேற்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கத்தின் அமைச்சர்கள், சமூக வலைத்தலங்களில் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குபணிக்கின்றனர் . இது மிகவும் பயங்கரமான நிலை . அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்ததை, தற்போது அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அவ்வாறான ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து சமூக ஊடகங்களை அடக்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறதுஎன்று குற்றம் சாட்டினார்
![]()