இலங்கை

பல பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலைமை; மீட்புப் பணிகளுக்கு மிகப் பெரும் சவால்; மண்ணில் புதையுண்டோர் குறித்து சரியான தகவல்கள் இல்லாததும் பெரும் சிக்கல் 

மலையகத்தில் பல பிரதேசங்களிளும் கடந்த தினங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் சிக்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக் குழுக்கள் பெரும் நெருக்கடிகளையும் பெரும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

மண்சரிவு இடம்பெற்ற இடங்களை சுற்றியுள்ள வீதிகள் மண்சரிவுகளால் உடைந்துள்ளமையினாலும், பல இடங்களில் வீதிகள் காணாமல் போயுள்ளமையினாலும் அந்த இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் செல்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அந்தப் பிரதேசங்களில் பிரதான வீதிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வீதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதன்படி இன்னும் மீட்புக்குழுக்கள் செல்லாத மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கடந்த தினங்களில் அலவத்துகொட, உடுதும்பர, மீமுரே, கம்பளை, ரம்புக்கணை , கொத்மலை உள்ளிட்ட இடங்களிலும் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலும் பாரிய மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு மீட்புக் குழுக்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள் மீட்கப்படுகின்ற போதும், இன்னும் அங்கு மண்ணுக்குள் பெருமளவு சடலங்கள் இருக்கலாம் என்ற நம்பப்படுகின்றது.

குறிப்பாக மண்சரிவு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் காணாமல் போனோரின் எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் இன்னும் சரியாக கணக்கிடப்படாத காரணத்தினாலும் அந்த இடங்களில் எத்தனை பேர் புதைந்துள்ளனர் என்பது தொடர்பில் கண்டறிய முடியாத நிலைமை உள்ளதாகவும், இதனால் மீட்புக் குழுக்கள் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் டித்வா புயலுடன் பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவியதுடன், பல இடங்களில் 350 முதல் 500 மில்லிமீட்டர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இவ்வாறான நிலைமையில் வெள்ளிக்கிழமை காலை முதல் இந்த மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாக ஆரம்பித்ததுடன், பல இடங்களில் கடும் வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டிருந்தன.

இந்த மாவட்டங்களில் மழையுடன் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்ந்துகொண்டிருந்த போதும். வெள்ளிக்கிழமை மாலை முதல் அந்த மாவட்டங்களில் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததால் மண்சரிவுகள் தொடர்பான தகவல்கள் மீட்புக்குழுக்களுக்கு உடனடியாக கிடைக்கவில்லை. சில பிரதேசங்களில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும், அதற்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய போதும், மண்சரிவில் வீதிகள் சேதமடைந்திருந்தமையினாலும், தொடர்ந்தும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவும் மீட்புக் குழக்களால் உடனடியாக அவ்விடங்களை நெருங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. அத்துடன் மீட்புக்குழுக்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்று மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொலைத்தொடர்புகள் இயங்கத் தொடங்கியதை தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு தொடர்பான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. இதன்படி சனிக்கிழமை காலை வரையில் 50 வரையிலான உயிரிழப்புகளுடன் 50 பேர் வரையிலானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டது போதும் தொலைத்தொடர்புகள் செயற்பட ஆரம்பித்த பின்னர் அந்தத் தொகைகள் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தன. இதன்படி நேற்ற பிற்பகல் வரையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 330ஐ கடந்திருந்தது. எவ்வாறாயினும் மீட்புக்குழுக்கள் பல சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *