மலையகப் பேரழிவுகளுக்கு நீர்த்தேக்கங்கள் காரணமா?; மறுக்கும் மகாவலி அதிகார சபை

மகாவலி நீர்த்தேக்கங்களை உரிய நேரத்தில் காலி செய்யாததாலேயே பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைக்கட்டு மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் தர்மதாச முற்றாக நிராகரித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொறியியல் ரீதியாக ஆதாரமற்றவை மற்றும் அரசியல் இலாபம் கருதி முன்வைக்கப்படுபவை எனவும் தெரிவித்தார்.
வெள்ளப் பெருக்குக்கு சற்று முன்னர்,அதாவது நவம்பர் 27ஆம் திகதி கூட, கொத்மலை நீர்த்தேக்கம் வான் மட்டத்தை அடைய 41 அடி வெற்றிடத்துடன் காணப்பட்டது. வான் மட்டத்தை அடையாத ஒரு நீர்த்தேக்கத்தை காலி செய்ய முடியாது என்றும், மகாவலி நீர்த்தேக்கங்கள் ஒரு பல்நோக்குத் திட்டம் என்பதால், வறண்ட கால விவசாயத் தேவைகளுக்காக நீரைத் தக்கவைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வெள்ளப் பெருக்குக்கு நீர்த்தேக்கங்கள் காரணமல்ல, மாறாக ஆற்றங்கரைகளில் கட்டப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத பெருமளவு கட்டுமானங்கள் மற்றும் ஆற்றின் நீர்ப் பாதை அடைபட்டுள்ளதே பிரதான காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.
எனவே, அரசியல் இலாபத்திற்காகச் செயல்படுவதை விடுத்து, தன்னுடன் நேரடியாக விவாதித்து உண்மையை அறிந்துகொள்ள வருமாறு அவர் குற்றச்சாட்டுகள் சுமத்துபவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
![]()