புயல் அகன்று மழை குறைவடைந்த போதும் மலையகத்தில் பாரிய மண் சரிவுகள் தொடர்கிறது; இழப்புகளும் தொடர்கிறது

டித்வா புயல் நாட்டை விட்டு அகன்ற மழை நிலைமை குறைவடைந்துள்ள போதும் மலையக பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பான தகவல்கள் வெளிவந்தமுள்ளன.
இதேவேளை மலையகத்தில் பல பிரதேசங்களில் வீதிகள் மண்சரிவுகளில் சேதமடைந்துள்ளதாலும் மற்றும் தொலைத்தொடர்புகள் வழமைக்கு வராத காரணத்தினாலும் உடனடியாக மீட்புக் குழுக்களால் அந்த இடங்களை நெருங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த தினங்களில் மண்சரிவு இடம்பெற்ற இடங்களில் இருந்து காணாமல் போனவர்களின் சடலங்கள் மீட்கப்படுவது தொடர்பிலும் தகவல்கள் வெளிவருகின்றன.
மாத்தளை மாவட்டத்தில் அதிகளவான மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதும் தொலைத்தொடர்புகள் அங்கே வழமைக்கு வராத காரணத்தினால் அது தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. கொத்மலை பகுதியிலும் பல இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.
தலவாக்கலை ஊடான கொத்மலை பாழுவத்த பகுதியில் 100 மீற்றர் வரையிலான பகுதி மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதால் மீட்புக் குழுவினருக்கு கொத்மலை பிரதேசத்திற்கு உடனடியாக நெருங்க முடியாத நிலைமை காணப்பட்டது.
இதேவேளை வலப்பனை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வலப்பனை பிரதெசத்தை சுற்றியுள்ள வீதிகள் மண்சரிவுகளால் அடித்துச் சென்றுள்ளதால் அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுக்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி ரம்புக்வெல மற்றும் சரசவிகம பகுதியில் இடம்பெற்ற மண்சரிவுகளில் உயிரிழந்த 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()