இலங்கை

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாகத் தனது வீடு நோக்கிப் பயணித்துள்ளார்.

அப்போது, பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளது. அவர்கள் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதலாளிகளிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள, வாள்வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரை, அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டியுள்ளது.

ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக விழுந்தபோது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வெட்டியதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் (CCTV) சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *