இலங்கை

மன்னார் – மாந்தையில் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ள 40 பேர்!

மன்னார் மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் மழை வெள்ளத்தால் அந்தக் கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தக் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவத்தினரின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, விமானப் படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *