சீனாவின் “தன்னிச்சையாகக் கைதிற்கு” இந்தியா கண்டனம்

அருணாச்சலப் பிரதேசத்தின் நிலை குறித்த சீனாவின் கருத்துக்களை இந்தியா கடுமையாக நிராகரித்ததுடன், ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைதானதை “தன்னிச்சையாகக் கைது செய்தல்” என்று விவரித்ததற்கு கடுமையான கவலையை வெளிப்படுத்தியது.
இந்த விவகாரம் சீன அதிகாரிகளிடம் உயர் மட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு (MEA) தெரிவித்தது. அதே நேரத்தில் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் “ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத” பகுதியாகவே உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகன் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருந்து ஷாங்காய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஜப்பானுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை தன்னிச்சையாகக் கைது செய்தது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சுவெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியது” என்றார்.
அருணாச்சலப் பிரதேசம் குறித்த இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை செய்தித் தொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தினார். “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும், இது ஒரு வெளிப்படையான உண்மை. சீனத் தரப்பால் எவ்வளவு மறுக்கப்பட்டாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப் போவதில்லை.”
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய கடவுச் சீட்டு வைத்திருக்கும் பயணி, சீன விதிமுறைகளின் கீழ் அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத பயணத்திற்கு தகுதி பெற்றிருந்தாலும், போக்குவரத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் சீன விதிமுறைகளின் கீழ் 24 மணிநேரம் வரை வழங்கப்படும் வசதியாகும். இந்த சம்பவம் நியாயப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், சர்வதேச இயக்கத்தை நிர்வகிக்கும் விதிமுறைகளையும் மீறுவதாக இந்தியா தெரிவித்தது.
“தடுப்புக்காவல் பிரச்சினை சீனத் தரப்பிடம் வலுவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் சீன அதிகாரிகளால் இன்னும் அவர்களின் செயல்களை விளக்க முடியவில்லை,” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார். “சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் அவர்களின் சொந்த விதிமுறைகளையும் மீறுகின்றன” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்பவர் மீது சுமத்திய துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்தது. “சம்பந்தப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த கட்டாய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என்று கூறியது.
ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன அதிகாரிகளிடமிருந்து துன்புறுத்தலை எதிர்கொண்டதாக குறித்த நபர் தெரிவித்தார். அவர்கள் தனது இந்திய குடியுரிமை குறித்து “கேலி செய்து கேள்விகளை எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுதில்லியில் உள்ள தூதரகம் மற்றும் பெய்ஜிங்கில் உள்ள வெளியுறவு அமைச்சு ஆகிய இரண்டிலும் சீனத் தரப்பிற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.
![]()