பலதும் பத்தும்

இந்திய பேரிடர் மீட்புக் குழுவினரும் இலங்கையின் முப்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் !

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தையடுத்து பல பிரதேசங்களிலும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்திய பேரிடர் மீட்புக் குழுவினரும் இலங்கையின் முப்படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய விமானந்தாங்கி கப்பல் விக்ராந்த் இல் இருந்து இரண்டு சீடக் (Chetak) ஹெலிகொப்டர்கள் இன்று மதியம் திவுலப்பிட்டி மற்றும் கம்பஹா பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. இதன்போது வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த பன்னல பிரதேசத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையை இந்திய விமானப்படை விமானிகள், இந்திய டைவர்ஸ் ஆகியோருடன் இணைந்து இலங்கை விமானப்படை விமானிகளும் இணைந்து மேற்கொண்டனர்.

இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் இன்று மாலை இலங்கைக்கு வந்து தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த விமானம் 22 பேருடன் நிவாரணப் பணிகளுக்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களையும் கொண்டு சென்றது. இந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும் விங் கமாண்டர் நாகேஷ் குமார் மற்றும் விங் கமாண்டர் முகுல் மகாஜன் ஆகியோர் விமானிகளாக செயற்பட்டனர்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் 80 பேர் கொண்ட குழுவுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தததுடன், தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தின் இரண்டு விமானங்கள் கம்பஹா மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் அனர்த்த நிலைமையைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அத்தியாவசிய உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் சிலாபம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அப்பகுதியில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, மருத்துவமனையில் படுகாயமடைந்த 28 மற்றும் 35 நாட்கள் உடைய இரண்டு குழந்தைகளும், 10 வயது குழந்தையும், இலங்கை விமானப்படை தளத்தின் 4வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல்-412 ஹெலிக்கொப்டர் மூலம் இரண்டு மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அத்துடன் ஆம்புலன்ஸ் உதவியுடன் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button