இலங்கை

பதுளை மாவட்டத்தில் 21 பேர் உயிரிழப்பு; ஐவரைக் காணவில்லை; 13 பேர் மீட்பு

நாட்டில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்ட த்தில் கடந்த நாட்களாக பெய்து வரும் அடைமழையினால் சிறு மண்சரிவுகள், வீடு மற்றும் நிலம் தாழிறங்குதல் , மண்மேடுகள் என்பவற்றின் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதுடன்05 பேர் காணமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்;

இன்று(நேற்று) நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் பதுளை மாவட்டத்தில் 886 குடும்பங்களைச் சேர்ந்த 3089 பேர் அடைமழை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாக 21 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவ் உயிரிழப்புகள் பதுளை, பசறை, லுனுகலை , கந்தகெட்டிய, சொரணத்தோட்ட மற்றும் எல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பதிவாகியுள்ளன.
லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பட்டாவத்தை தோட்டத்தில் லயன் குடியிருப்பு தாழிறங்கியதன் காரணமாக 06 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் அடங்குகின்றனர். ஜனதாபுர பகுதியில் மண்மேடு சரிந்ததன் காரணமாக ஒருவரும், மெட்டிக்காதென்ன பகுதியில் வீடொன்று மண்சரிவிற்கு உள்ளானதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பசறை மடுகஸ்தலாவ பகுதியில் மண்சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். எல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெமோதரை தேவாலயத்திற்கு அருகில் மண்மேடு சரிந்ததன் காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சொரணத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துங்கிந்தவத்தை கிராமத்தில் மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.

பதுளை தெளிவத்தை தோட்ட, கெந்தகொல்ல பிரிவில் மண்மேடு சரிந்ததன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஹெகொட பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மெட்டிகாதென்ன பகுதியில் மண்சரிவில் சிக்குண்ட இருவரும் ஊவாபரணகம பகுதியில் மண்மேடு சரிந்ததன் காரணமாக அதில் சிக்குண்ட மூவரும் காணமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
அனர்த்தத்தில் சிக்கிய 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள 369 குடும்பங்களைச் சேர்ந்த 1364 பேர் மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள 32 அனர்த்த பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரண பொருட்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களினால் வழங்கப்படுகின்றன.

மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிதல் என்பவற்றின் காரணமாக பதுளை- பசறை வீதி, பசறை- லுனுகலை வீதி, பசறை- மடுல்சீமை வீதி, பதுளை- மகியங்கன வீதி என்பவற்றின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. பதுளை- பசறை வீதியின் 6ஆவது மைல்கல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் சிறு , சிறு மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
அவற்றை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நமுனுகுல, பசறை, ஹாலிஎல ஆகிய பகுதிகளில் அனர்த்தங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடைமழை தொடர்வதால் ஆறுகள்,ஓடைகள் மற்றும் குளங்கள் என்பன பெருக்கெடுத்துள்ளன.
மழை தொடரும் பட்சத்தில் அனர்த்தங்கள்அதிகரிக்கும் நிலை ஏற்படும்

இதேவேளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து துரித முடிவுகளை எடுக்கும் முகமாக பதுளை கச்சேரியின் கேட்போர் கூடத்தில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சமந்த வித்யாரத்ன தலைமையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவின் பங்குபற்றலுடன் மாவட்ட அரச உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம் ஒன்று இன்று இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *