கட்டுரைகள்

தொப்புள் கொடி உறவு பற்றிய கேள்வியும்!…. தொடர்ந்து வரும் என் பதிலும்!!…. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும்போல் பிறப்பும் இறப்பும் போல் தொப்புள்கொடி உறவை ஏற்பதும் துறப்பதும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு. உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை என்று தத்துவ கோட்பாட்டை உள்வாங்கியவர்கள் அனைவரும் அதை அறிவர்.

கடவுள் எங்கோயோ இருக்கிறார் அவர் அப்படிச் செய்வார் இப்படிச் செய்வார் காத்தருள்வார் கருணை புரிவார் என்பவர்களுக்கு மத்தியில் கடவுள் எங்குமில்லை அவர் என்னைக் கடந்து என் உள்ளத்தில் இருக்கிறார் நான் நல்லது செய்தால் நன்மையும் தீயதைச் செய்தால் தீமையும் தந்து உள்ளிருந்தே உணர்த்துகிறார் என்போரும் உண்டு.

உண்டென்பவர்கள் எவரும் சும்மா இருப்பதில்லையே. அவர்கள் அவர்களது கருத்தை பிரதிபலிப்பதுபோல் போல் இல்லை என்பவர்களும் தங்கள் கருத்தைக் கூறுவதில் தவறேதும் இல்லை. உங்களுக்கு ஒன்றைப பிடிக்கிறது என்பதற்காக மற்றவர்களுக்கும் அது பிடிக்க வேண்டும் என்பதில் நியாயம் இல்லை. உங்களுக்கு இனிப்பு பிடிக்கிறது என்றால் தவறே இல்லை.

The Way of Rama' Between India and Sri Lanka - ARCHAEOTRAVEL.euஆனால் அதே இனிப்பை பொதுவெளியில் கொண்டு வந்து சிறப்பென்று சொல்லும்போது இனிப்பின் விளைவான அதன் மறுபக்கத்தை கூறுவதை தப்பென்று சொல்லமுடியாது. சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு அற்புதமான விளக்கத்தைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன். சில சமயங்களில் பத்து புத்தகம் படித்து பெறும் அனுபவத்தை பத்து நிமிட காணொலி கண்களைத் திறக்கிறது.

ஊடகங்கள் எதுவுமே இல்லாதபோது புத்தகமே பிரதானமாக இருந்த காலத்தை இக்காலத்துடன் ஒப்பிடக்கூடாது. எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் ஒன்றை செய்தே ஆகவேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடாதவர்கள் இல்லை. எல்லோரும் கொண்டாடிய அவ்விளையாட்டை ஒரு அறிஞர் பதினொரு முட்டாள்கள் விளையாடுகிறார்கள். அதை பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லியும் இருக்கிறார்.

அது அவர் சொந்தக் கருத்து. அதுபோல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்தென்று ஒன்று இருக்கும். அந்த தனிப்பட்ட கருத்தை கூறுபவனே உண்மையானவன். ஐயோ பெரும்பாலவர்கள் விரும்பும் ஒன்றின் மீது எப்படி நம் கருத்தைக் கூறமுடியும் என்பவன் அவனுக்கும் உண்மையாக இல்லை மற்றவர்களுக்கும் உண்மையாக இல்லை.

இப்போது அந்த காணொலிக் காட்சிக்கே வருகிறேன். நான் இதுவரை எதை உண்மை என்று நம்பி வந்தேனோ அதை ஒன்றுமில்லை என்று ஊதித் தள்ளுவதாக இருந்தது அக்காணொலி. அதன் விளக்கம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக்காணோம் என்ற பழமொழி பற்றியதுதான்.

Rama's Bridge (Adam's Bridge)

நான் இதுவரை எண்ணிவந்தது துரத்தி வரும் நாயை அடித்து துரத்த கல்லைக் காணோம் என்றும் கல் பக்கத்தில் கிடக்கும்போது எந்த நாயும் துரத்துவதில்லை என்பதாகும். பெரும்பாலும் எல்லோரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் அந்த விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அப்படி சிந்திக்க வைத்தது ஒரு நாயின் கற்சிலையாகும்.

அந்த நாயின் கற்சிலையை பைரவராக பார்த்தால் அங்கே இருப்பது கல்லாகத் தெரியாது. அதையே நீங்கள் கல்லாகப் பார்த்தால் அங்கு பைரவர் தெரியவேமாட்டார். அதுபோல் தொப்புள்கொடி உறவை வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் தொப்புள்கொடி உறவு தெரியாது. அதையே தொப்புள்கொடியாக பார்த்தால் அங்கே வேறாக எதுவும் தெரியாது.

தொப்புள்கொடி உறவுக்காக தீயிட்டு தன்னைக் கொளுத்திக் கொண்டதை தொப்புள்கொடி உறவாகப் பார்த்தால் தொப்புள்கொடி உறவாகத்தான் தெரியும். அதையே வேறு கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறாகத்தான் தெரியும். அவர் எதற்காக தீக்குளித்தார்? அதனால் அவருக்கு என்ன பலன் என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார்? என்பது புரியும்.

அன்றும் பாலஸ்தீனப் பிரச்சனை இருந்தது. அதற்காகவா தீக்குளித்தார்? அல்ல அன்று தமிழ்நாட்டில் பிரச்சனைகளே இல்லையா? தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்காகத் தீக்குளித்திருப்பாரா? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார் என்று தெரியவரும். ஏற்காவிட்டாலும் பரவாயில்லை ஒவ்வொருவர் கருத்து ஒவ்வொரு மாதிரி என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் குறைந்த பட்சம் பொருளை உணர்ந்தாலாவது பொருத்தமாக இருக்கும். உன்கண்ணில் நீர் வடிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி என்ற பாரதியின் வரிகளை எடுத்து கண்ணதாசன் தன் பாடலில் வைத்ததை தொப்புள்கொடி உறவுகள் விரும்பாமலா போயிருப்பார்கள். அப்படி தமிழ் தேசிய இனத்தில் விரும்பியவர்கள் எல்லோமே
தொப்புள்கொடி உறவுகள்தான்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றான் அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள் என்ற பாடலைக் கேட்டதும் பரவசம் அடைந்த தேசிய இனத்தின் அத்தனைபேரும் தொப்பள்கொடி உறவுகளே. கொதிக்கின்ற தாரில் பச்சிளங்குழந்தையை தூக்கி எறிந்ததைப் பார்த்ததும் துடித்துப் போன தேசிய இனத்தின் அத்தனை பேரும் தொப்புள்கொடி உறவுதான்.

சிங்களத்தீவினுக்கோர் (பாரதி காலத்தில் இனப்பிரச்சினை இல்லை) பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம் என்று யாருக்காகப் பாடியிருப்பார். பக்கத்து நாட்டில் வாழும் எந்த தேசிய இனத்துக்காக பாடியிருப்பார்? என்று சிந்தித்துப் பார்த்தால் தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார் என்று தெரியும்?

பல ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள ஒரு தீவுநாட்டில் ஒரு தேசிய இனத்துக்கு பிரச்சினை ஏற்பட்டு கிளர்ச்சி எழுந்தபோது பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒரு பெரியநாடு தலையிட்டது. தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார் என்பதை அந்த நிகழ்வே வலியுறுத்தும்.

அதே நாடு அருகிலுள்ள நாட்டில் மக்கள் உரிமைகளுக்காக போராடியபோது வேறுவிதமாக நடந்து கொண்டதை உணர்ந்தோமானால் தொப்புள்கொடி உறவு என்போர் யார் என்பது கண்டிப்பாகவே புரியும்.

இன்றும் ஒரு தேசிய இனத்தை கொடூரமாகத் தாக்கி வரும் இன்னொரு தேசிய இனத்துக்கு எதிராக தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருபவர்கள் தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார் என்ற கேள்விக்கு பதிலாகவும் அமையும்.

எல்லாவற்றிற்கு மேலாக உலகத் தமிழரின் உறவுப்பாலம் என்ற சொற்றொடர் ஒருபகுதி வாழ் மக்களுக்காக மட்டுமானதல்ல. அது ஒட்டு மொத்த தேசிய இனத்துக்குமானது என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவதைக் கண்டால் தொப்புள்கொடி உறவு என்போர் யார் என்று புரியும்.

அக்கினிக்குஞ்சு என்ற பெயர்கொண்டு இயங்கும் இணையதளமும் அதில் இணைந்து இயங்கி வரும் தேசிய இனத்தை உணர்ந்தால் தொப்புள்கொடி உறவு என்போர் யார் என்று புரியும். தொப்புள்கொடி உறவென்போர் யார் என்றால் கம்பனும் வள்ளுவனும் பாரதியும் நமக்கு வெவ்வேறாகவன்றோ தெரிந்திருப்பார்கள்.

எனக்கு இலங்கை அரசியலோ இந்திய அரசியலோ கண்ணில் தென்படுவதில்லை.
தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து அம்பு எய்தவனுக்கு இலக்கு ஒன்றே கண்ணில் தெரிந்தது. அதுபோல் கண்ணீரில் என் இனம் கலங்கியதைப் பார்த்ததும் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த எனக்கு தொப்புள்கொடி உறவு மட்டுமே இலக்காய் தெரிகிறது.

Compressed Umbilical Cord | Birth Injury Lawyers in Ohio and KY

இதன் மூலம் நமக்கு ஒன்றைப் பிடித்தாலும் பிடிக்காது போனாலும் ஒரு கருத்து பொது வெளியில் பகிரப்படும்போது அது பேசப்படும். அதிலும் ஒருவர் சார்ந்திருக்கும் தேசிய இனம் மற்றும் மதம் போன்றவற்றில் அதைச் சார்ந்த கருத்துக்களை கூற அவருக்கு உரிமை உண்டு. மற்ற தேசிய இனத்தையோ மதத்தையோ பற்றி வேண்டுமானால் பேசாமல் இருக்கலாம். ஏனென்றால் அது அவர்கள் பிரச்சனை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தன் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதைப் பற்றி பேசுவதோ கருத்து கூறுவதிலோ எந்த தவறுமில்லை. அதுபோல் தொப்புள்கொடி உறவுகள் என்போர் யார் என்ற கேள்வியை எவர் கேட்டிருந்தாலும் எந்த தவறும் கண்டிப்பாக இல்லை. நான் பதிலாக மட்டும் என் கருத்தை அரசியலுக்கு அப்பால் நின்று பதிவிடுகிறேன். தானாடு போனாலும் தன் தசையாடுவதால் ஏற்பட்ட உந்துதலே இக்கட்டுரை.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *