கட்டுரைகள்

வாட்ஸ்ஆப் குழுவும் வரம்பு மீறலும்!… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

திருவள்ளுவர் இரண்டுவரிகளில் எழுதுகிறேன் என்று சொல்லி ஏகப்பட்டதை எக்கச்சக்கமாய் மனித மேம்பாட்டுக்காக எழுதிவிட்டுச் சென்றுவிட்டார். அவற்றுள் இடிப்பரே இல்லாத ஏமரா மன்னன் என்ற குறள் வேறு என் கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டது. ஏதிலார் குற்றம் போல் என்ற குறள் என்னை இடிக்கத் தொடங்கியது.

உண்மையைச் சொன்னால் கசக்கும். கசப்பான மருந்து உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் கசந்தாலும் உட்கொள்கிறோம். ஆதலால் இந்த கசப்பான மருந்தை உட்கொள்ளுங்கள். அது சொல்வதில் உண்மை இருக்கும் பட்சத்தில் ஒருவர்கூட கனியிருப்பக் காய் கவரமாட்டீர்கள்.

வாட்ஸ் ஆப் என்பது நல்ல செயலிதான். அதை மறுப்பதற்கில்லை. அதில் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது. எதுவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்பதால் அதனை அளவோடு வைத்துக் கொண்டு வளவள சமாச்சாரங்களைத் தவிர்க்கலாம். எந்தெந்த வாட்ஸ்ஆப் குழு எந்த அடிப்படைக் காரணத்துக்காக தொடங்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்தினால் மட்டும் நல்லது என்பது என் பணிவான கருத்து.

சான்றாக மகமாயியின் மகத்துவத்தை அறிந்து கொள்வதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் மாட்டிறைச்சி சமைப்பது எப்படி? மசாலா அரைப்பது எப்படி? மசால்தோசை செய்வது எப்படி? என்றெல்லால் பதிவுகள் வந்தால் நன்றாகவா இருக்கும்? அதற்குப் பதிலாக சகலகலாவல்லவர்களின் சமையற்கூடம் என்ற பெயரில் ஒரு வாட்ஸ்ஆப் குழு அமைத்தால் விரும்பிவர்கள் தானாகவே வந்து இணைவார்கள்.

Time limit to delete WhatsApp messages increased: Here's how to delete |  Mint

எனது நண்பர் ஒருவர் நொய் நொய் என்று எப்பொழுதும் வாட்ஸ்ஆப் வருவதை எண்ணி அலுத்துக் கொள்வார். என்னவென்றால் உரலுக்குள் தலையை விட்டுவிட்டேன் உலக்கை தன் கடமையைச் செய்கிறதென்பார். மனிதர்கள் எல்லாம் ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் அல்ல. சிலருக்கு வாட்ஸ்ஆப் வந்து கொண்டே இருப்பது தேன் வந்துபாய்வது போல் இருக்கும். சிலருக்கு தேள் கொட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கும்.

அப்படியானால் அதை சைலண்டில் போட வேண்டியதுதானே என்பேன். அட போங்க நீங்க ஒன்னு மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்த முடியுமா? நமக்கு வேறு எவ்வளவோ வேண்டப்பட்ட அவசரமான தகவல் வருமல்லவா? என்பார். அவர் சொல்வதும் உண்மைதான். இன்னொரு நண்பர் இந்த வாட்ஸ்ஆப்பினால் வேண்டாத பிரச்சனைகள் எல்லாம் வருவதாகச் சொல்லி குறைபட்டார்.

அதனால் அவசியமான ஒன்றிற்காக தொடங்கப்பட் வாட்ஸ்ஆப் குழு அவசரமாக முடக்கப்பட்டது. இன்று அந்த நண்பரே வாட்ஸ்ஆப் குழுவில் பவணிவருகிறார். எதுவும் வாழ்க்கையில் நிரந்தரமல்லப்பா, மாற்றம் ஒன்றுதான் மாறாதென்று என் மண்டையில் குட்டுகின்றார். ஊருக்குத்தான் உபதேசமெல்லாம் தனக்கில்லை என்ற வாய்மொழியிலும் பொருளுள்ளதை உணர்ந்தேன்.

ஒரு எழுத்தாளனாக மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுபவனே நேர்மையான எழுத்தாளன். அப்படிச் சொன்னால் அவர் என்ன நினைத்துக்கொள்வாரோ இப்படிச் சொன்னால் இவர் என்ன நினைப்பாரோ என்று எண்ணிக்கொண்டே எழுதுபவரெல்லாம் எழுத்தாளர் அல்ல. நூல்வெளியிட்டால்தான் எழுத்தாளர் என்று இலக்கணம் வகுத்துக் கொண்டு எண்ணுவது போலாகிவிடும்.

WhatsApp's 'Delete for Everyone' feature finally rolled out | YourStory

அப்படியெல்லாம் எண்ணியிருந்தால் சல்மான் ருஷ்டி, பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள். எழுத்தாளர்கள் என்பதைவிட அவர்களது எழுத்துக்கள் என்ன உணர்த்துகிறது என்பதே முக்கியம். அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வெள்ளிகளுக்கு மத்தியில் விடிவெள்ளி போன்றவர்கள்.

இந்த வாட்ஸ்ஆப் பிரச்சனைக்கு காரணம் என்ன தெரியுமா? உலகமே உள்ளங்கையில் வத்துவிட்ட இந்த காலத்தில் ஊரறிந்த விசயத்தை ஒன்பதுபேர் பகிர்வதுதான். இந்த ஒன்பது பேருக்கும் பத்து பத்துபேர் பல்லக்கு தூக்கி ஓடிவருகிறான் உதயசூரியன் என்று ஓடோடி வருவார்கள். அண்ணாச்சி நான் சொல்வதில் கொஞ்சமாவது உண்மை இருந்தால் நான் சொல்வதை நான்கு பேருக்கு பகிருங்கள்.

அய்யோ எரிகின்ற கட்டையை எடுத்து முதுகைச் சொரிந்து விட்டேனே. வாட்ஸ்ஆப்பிலே வேண்டாம் வாய்வழிச் செய்தியே போதும். வாட்ஸ்ஆப் இல்லாத காலத்திலேயே வதந்திகளே வானூர்தியில் செல்லவில்லையா? சரி, இந்த பல்லக்கு தூக்கும் பத்துபேரைப்பற்றி பலர் ஆய்வு செய்து வெளியிட்ட ஆய்வறிக்கை என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

இந்த பத்துபேரும் அப்பாவிகளே. இப்படி அப்பாவிகள் பலர் இருக்கின்றனர். ஊரறிந்த ஒன்றை ஒன்பதுபேர் ஒன்பது முறை பரப்புகிறார்கள். அது என்ன ஒன்பது பேர்? அதொன்றுமில்லை அதெல்லாம் ஒரு ப்ளோவில வருவதுதான். உசாத்துணையாக சங்கர் படங்களை பார்ப்பதால் வந்த பாதிப்பு.

தெரியும் தெரியும் என்கிறார் மாடசாமி அண்ணாச்சி. எப்பவுமே அவர் அப்படித்தான். கற்பூர புத்தி அவருக்கு கப்புனு புடுச்சுக்குவாரு. என்ன அண்ணாச்சி என்றேன். அஞ்சு பேரு அஞ்சஞ்சு பைசாவா வாங்கினா என்று ஆரம்பித்தார். அண்ணாச்சி புரிஞ்சிடிச்சி என்றேன். நிறுத்திக் கொண்டார்.

நான் நிறுத்த முடியாதல்லவா கட்டுரையை முடிக்க வேண்டுமே. சரி மீண்டும் இந்த ஒன்பதுபேர் பத்து பத்து முறை பகிர்வதன் காரணம் என்ன தெரியுமா? வாட்ஸ்ஆப்பில் பதிவிட்டவர் நாம் பதில் போடாவிட்டால் நம்மைப் பற்றி பதிவிட்டவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற எண்ணம்தான் காரணம். அவர் நம்மைப் பற்றித் தவறாக நினைத்துக் கொள்வாரோ என்ற பயம்தான்.

இந்த பயத்தை மனதத்துவ ரீதியாக உணர்ந்துதான் பொம்மைகளையும் அங்கே வைத்துள்ளார்கள். எனவே அவசரகதியிலும் ஒரு பொம்மையாவது போட்டு கடமையை முடித்துவிடுகிறார்கள். இப்போது நான் என்றோ கேட்ட பாடல் நினைவுக்கு வருகிறது. பொம்மைகளால் ஏற்படும் பலன்தான்.

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன தாம் விளையாட. உன் வாய்மொழி முல்லை எனில் தாய்மொழி இல்லை என்ற பாடல்தான் அது. உண்மைதான் தாய்மொழி வேண்டாம் பொம்மைகள வைத்தே செய்தியைக் கடத்த முடிகிறது.

இதில் செய்தி பதிவிடுபவர்கள் பதிவிடுகிறார்கள். அதைப் படிப்பது படிக்காததும் பதிவிடும் அவர்களுக்கும் தெரியும். பின் ஏன் உள்ளேன் ஐயா என்ற அட்டெண்டன்ஸ் போடும் வேலை. ஒழுங்கான மாணவன் என்று காண்பிக்கவா. நல்ல மாணவன் என்பது நன்றாகப் படித்து மதிப்பெண்கள் பெறுவதில் அல்லவா இருக்கிறது.

ஒவ்வொரு வாட்ஸ்ஆப் குழு தொடங்குவதற்கும் அதற்கென்று ஒரு அடிப்படையான காரணம் இருக்கிறது. ஆனால் அந்த காரணத்துக்கான செய்தியைக் காட்டிலும் மற்ற செய்திகள் நிரம்பி வழிகிறது. இப்போது எனக்கு மீனாட்சி அம்மன் கோவிலும் அங்கு பொருத்தப்பட்ட குழல் விளக்கும் ஞாபகம் வருகிறது. அந்த குழல் விளக்கின் காரணம் ஒளி கொடுக்கத்தான். ஆனால் நடப்பது என்ன?

அந்த ஒளிவிளக்கு முழுவதும் அதை வழங்கியவரான கடம்பூர் கந்தசாமி என்ற பெயர் இருக்கும். அதுமட்டுமா? அவரின் ஜாதகமே இருக்கும். இந்த எழுத்துக்கள் யாவும் குழல் விளக்கை நன்கொடை செய்தவரின் எண்ணமான வெளிச்சத்தைக் கொடுக்காமல் அவரைப்பற்றி மட்டும் விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கும்.

இதுபோன்றுதான் எதற்காக வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்பட்டதோ அதைவிடுத்து மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு செய்தியைப் பரப்ப எத்தனையோ வழிகள் உள்ளன. மின்னஞ்சல் உள்ளது. இணையதள ஊடகங்கள் பல உள்ளன. தினசரிகளும் சஞ்சிகைகளும் உள்ளன. இவையெல்லாம் போதாதென்று ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைத்திருக்கும் தளத்திலும் விளம்பரமா?

WhatsApp Introduces Ads: A Look at Ad Formats and Data Usage - Omnichat Blog

விளம்பரம் செய்வதை குற்றமென்று சொல்லவில்லை. விளம்பரத்துக்காக ஒரு தனி வாட்ஸ்ஆப்பை தொடங்கலாம். அதில் விருப்பமானவர்களை இணைத்துக் கொண்டு விம்பரப் படுத்தலாம். யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் ஒன்றிற்காக மட்டும் தொடங்கிய வாட்ஸ்ஆப்பில் பலவற்றையும் பகிர்வது தொடங்கப்பட்ட நோக்கத்தை தகர்த்து விடுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *