பலதும் பத்தும்

‘சர்வதேச கடற்படை போர்க்கப்பல் அணிவகுப்பு’

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 27 – 30வரை 7 நாடுகளின் 8 போர்க்கப்பல்களின் பங்கேற்புடன் சர்வதேச கப்பற்படை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து காலி முகத்திடல் கடற்பகுதில் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் சர்வதேச கடற்படை போர்க்கப்பல் அணிவகுப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே கடற்படை தளபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த சர்வதேச கடற்படை போர்க்கப்பல் அணிவகுப்பு இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் திறன்களை உலகுக்கு வெளிப்படுத்துவதும், நட்பு நாடுகளுக்கிடையேயான கடற்படை நல்லுறவை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இந்தியா (2), பங்களாதேஷ், பாக்கிஸ்தான், மசேலியா, ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து 8 போர்க்கப்பல்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. ஒட்டுமொத்தமாக 2776 வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளடங்களாக உள்நாட்டு உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை கடற்படையின் பங்கு மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இவ் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

27ஆம் திகதி வியாழக்கிழமை வெளிநாட்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும். 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரு நாட்டு கடற்படையினருக்கிடையிலான தொழில்முறை பரிமாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலாச்சார இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 29ஆம் திகதி கொழும்பில் கடற்படையினரின் அணிவகுப்பு நடைபெறும்.

அத்துடன், பொதுமக்கள் மற்றும் அழைப்பாளர்கள் கப்பல்களைப் பார்வையிட வாய்ப்பளிக்கப்படும். 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பிரதான நிகழ்வான சர்வதேச கப்பற்படை அணிவகுப்பு நடைபெறும். இதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடற்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். அன்றைய தினம் மாலை கப்பல்கள் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் செல்லும் என்றார்.

கடற்படையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரல் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில்,

வருகை தரும் போர்க்கப்பல்களின் அதிகாரிகள் தத்தமது சீருடையில் அணிவகுத்துச் செல்வர். இந்த அணிவகுப்பு காலி முகத்திடலில் இருந்து ஆரம்பித்து, பழைய பாராளுமன்றப் பகுதி ஊடாகச் சென்று கொழும்பு துறைமுக வளாகத்தை அடையும். இதனை கண்டுகளிக்க வீதிகளின் இரு மருங்கிலும் கூடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

29ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் குறிப்பிட்ட பகுதிகள் பொதுமக்களுக்காகத் திறக்கப்படும். பாதுகாப்பு அனுமதி மற்றும் நுழைவுச்சீட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வருகை தந்துள்ள வெளிநாட்டு போர்க்கப்பல்களைப் பார்வையிட வாய்ப்பளிக்கப்படும். 30ஆம் திகதி கப்பல்கள் கடலில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

ஜனாதிபதி ஒரு பிரத்தியேக கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிடுவார். இதன்போது அனைத்து நாடுகளின் கப்பல்களாலும் அவர்களது பாரம்பரியத்துக்கமைய மரியாதை செலுத்தப்படும். அணிவகுப்பின் போது கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button