இலங்கை

தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமைக்கு பின்னணியில் அரசியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தொல்பொருட்கள் காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை பின்னணியில் அரசியல் தேவையே இருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக கலாநிதி ஹினிதும சுனில் செனெவி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த பெயர் பலகைகள் மற்றும் திசைகாட்டிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை சிலர் அகற்றிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கூறியவாரு கருத்து தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் துறை சார்ந்து ஒருவித அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே தொல்பொருள் திணைக்களம், புராதன சின்னங்கள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி, அந்த இடங்களுக்குச் செல்வதற்கான திசைகாட்டிகள் மற்றும் பெயர் பலகைகளை நிறுவி வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான பெயர் பலகைகளை அமைக்கும் பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன. இது பொதுவாக திணைக்களம் முன்னெடுத்து வரும் ஒரு சாதாரண செயற்பாடாகும்.

இது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஒன்றோ அல்லது புதிய குழப்ப நிலையோ அல்ல. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் பொறுப்பான எமது உதவிப் பணிப்பாளர் இதில் தலையிட்டுள்ளார்.

ஆனால், அரசாங்கத்திற்குச் சொந்தமான, சட்டரீதியாக நிறுவப்பட்ட இந்தப் பலகைகளை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு கழற்றி, அவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. நான்கு இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதற்கமைய, தொல்பொருள் திணைக்களம் இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும், பட்டிப்பளை – கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் இது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான் இது குறித்து தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து அறிக்கைகளை கோரியுள்ளார்.

அதேபோல பொலிஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் ஆனந்த விஜேபால இது குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாருக்கு உடனடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏனெனில் தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அப்பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பலகைகளை நிறுவுவதற்குப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்களிடம் எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை என திணைக்களம் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இது நீண்ட காலமாக முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடு.

இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் ஒன்று இருப்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இது அப்பாவி மக்களுக்கோ அல்லது மாகாணத்தில் வசிக்கும் குடிமக்களுக்கோ தேவையான ஒன்றல்ல.

இதனை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து தயவுசெய்து விலகி இருக்குமாறு நாம் மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசாங்கம் இது தொடர்பில் மிகவும் முறைப்படியும், வேகமாகவும் செயற்படும் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸாரால் முடியும் என நான் கருதுகிறேன்.

அதுவரை பொதுமக்கள் எவரும் பதற்றமடையத் தேவையில்லை என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அரசாங்கம் இதைப் பார்த்துக்கொள்ளும். புத்த சாசனத்தையும், தொல்பொருள் உள்ளிட்ட இடங்களையும் பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் உள்ளது. அதனை நாம் மிகவும் பொறுப்புடன் செய்வோம் என்று கூறுகிறேன்.

எனவே, மட்டக்களப்பில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மீண்டும் நான் கேட்டுக்கொள்வது யாதெனில், இவ்விடயம் தற்போது பொலிஸ் மற்றும் சட்டத்தின் கையில் உள்ளது.

நாளை தினத்திற்குள், சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த எம்மால் முடியும்.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *