இலங்கை

பாரிய ஊழல், மோசடிகளால் முன்னாள் ஆட்சியாளர்கள் குடும்பத்துடன் சிறைக்கு செல்லும் நிலை வரலாம்

கடந்த ஆட்சிக் காலங்களில் நடந்த பாரிய ஊழல்,மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் முன்னாள் ஆட்சியாளர்கள் குடும்பத்துடன் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சுதத்த திலகசிறி என்பவரின் சமூக வலைத்தள நிகழ்ச்சியொன்றில் நடந்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது வசந்த சமரசிங்க தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். ஆனால் சிலர் குழப்பமடைந்துள்ளனர் மக்கள் பணத்தை கொள்கையடித்தவர்களுக்கு இப்போது நாட்டில் சட்டம் செயற்படுத்தப்படுகின்றது என்பது தெரியும். அது முன்னாள் ஜனாதிபதியா, அவரின் பாரியாரா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. குடும்பமாகவே சிறைக்கு செல்லவுள்ளனர். இதன்பின்னர் அப்பச்சியை பார்க்க வேண்டுமென்றால் வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளுக்கே செல்ல வேண்டிவரும். திருடர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுக்கு எதிராக இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது.

நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அதனை தடுக்க எவ்வளவோ முயற்சிக்கப்படுகின்றது. ஆனால் அதற்கு இடம் வழங்கப்படாது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது நாங்கள் முன்வைத்திருந்த முறைப்பாடுகள் பெட்டிகளில் மூடியே கிடந்தன. இப்போது அந்த பெட்டிகள் திறக்கப்பட்டு விசாரணைகள் நடக்கின்றன. நீதித்துறை சுயாதீனமாக இயங்குகின்றது. இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. விசாரணைகள் நடக்கின்றது. அதன்படி நடவடிக்கைகள் இடம்பெறும். நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே வந்துள்ளோம்.

பாராளுமன்றத்தில் சிலர் அச்சத்தில் கத்துபவர்களும் உள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன. முடிவில் அவர்கள் மகிந்தானந்த போன்று சிறைக்கு செல்ல நேரிடலாம். அதேபோன்று யோசித ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, கோதாபய ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ, சசிந்திர ராஜபக்‌ஷ அனைவருக்கும் எதிராக வழக்குகள் உள்ளன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *