வடக்கில் இராணுவம் நடத்தும் 14 சலூன்கள்; அமைச்சர் பிமல் கூறியது பொய்

வடமாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரால் வன்னியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் இதனை அடியோடு மறுத்துள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினரால் 14 சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதாகவும் வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் வடமாகாண அழகக சம்மேளங்களின் சம்மேளனம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாம், வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டைப் பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் மன்னார் வீதியில் அமைந்துள்ள பரிச்சங்குளம் இராணுவ முகாம், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னை நீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகம், முல்லைத்தீவு முருகண்டி கால்நடைப் பயிற்சிக் கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம், அக்கராயன் முருகண்டி விசேட படையணி இராணுவ முகாம் மற்றும் கேப்பாப்புலவு கொண்டமடு வீதி 59 ஆம் படைப் பிரிவு, மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம், விசேட அதிரடிப்படை முகாம், சிவில் பாதுகாப்புப் படையணி முகாம், பொலிஸ் நிலையம், சிறைச்சாலை ஆகிய பகுதிகளை அண்டிய அல்லது உள்ளடக்கிய பகுதிகளில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்படுகின்றன. இதனால், எங்கள் அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எங்கள் சங்கக் கட்டுப்பாடுகளை மீறும் செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. குறித்த சிகை அலங்கரிப்பு நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()