புலிகள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் போதைப் பொருட்கள் விநியோகத்தில் பொலிஸாரும், இராணுவத்தினருமே சம்பந்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் எம்.பி கூறினார். ஆனால் வடக்கிலேயே அதிகமாக கசிப்பு மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர். அங்குள்ள தாய்மார்கள் கண்ணீர்விட்ட இதுபற்றி கூறுகின்றனர். அங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதேவேளை போதைப் பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் சிலர் இருப்பதாகவும், நீதித்துறையிலும் சிலர் இருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். வடக்கை போன்று தெற்கிலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் கஜேந்திரகுமார் போன்றோர் குறைந்தது இவ்வாறான பிரச்சினைகளில் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தேசிய ஒற்றுமைக்கு பயப்படுகின்றார்கள். அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் இனவாதத்திலேயே தங்கியுள்ளது. முன்னர் தெற்கில் உள்ள இனவாதம் பலமாக இருந்தமையினால் அவர்களின் இனவாதம் தெரியவில்லை. எமது அரசாங்கம் இனவாதத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் வடக்கில் முற்றுமுழுதாக இனவாதம், குலபேதம் என்பன இருக்கின்றன.
போதைப் பொருள் பிரச்சினையில் வடக்கையும் தெற்கையும் இணைக்க முடியாதென்றால் வேறு எதனை செய்ய முடியும். வடக்கே யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, கேரள கஞ்சாவிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் வடக்கில் போதைப் பொருள் குறைவாக இருந்ததாக கஜேந்திரகுமார் எம்.பி.குறிப்பிட்டார். ஏன் அவ்வாறு குறைவாக இருந்தது என்றால் யுத்த காலத்தில் இந்தியாவில் இருந்து படகில் அவை கொண்டுவரப்படவில்லை. போதைப் பொருட்கள் அதிகளவில் படகுகளிலேயே கொண்டுவரப்படுகின்றன. யுத்த காலத்தில் இந்திய படகுகள் வரவில்லை. இதனாலேயே அப்போது போதைப் பொருட்களை கொண்டுவரவில்லை.
எவ்வாறாயினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர்களின் இயக்க நடவடிக்கைகளுக்காக அவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்றார்.
![]()