புத்தர் சிலையை அகற்றிய போது சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை

.திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நீங்கள் அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. நீங்கள் இரவு எடுத்த அந்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம் சிங்களக் காடையர்கள் மட்டுமே.அவர்களுக்கு நீங்கள் அடிபணிந்து உங்களை நம்பி,நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு முழுமையான துரோகத்தை செய்துள்ளீர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு,வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
உங்களை நம்பி,.நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்திருக்கிறீர்கள் .திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை.ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.
இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் இரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே.அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.
உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம்,நீங்கள் இனவாதிகள் இல்லை என சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள் என்றார்.
![]()