திருமலையில் பெளத்த – சிங்களப் பேரினவாதத்திற்கு அரசு அடி பணிந்தது மீண்டும் புத்தர் சிலை!

சர்ச்சைக்குரிய திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரையின் வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்த சிலை நேற்று திங்கட்கிழமை நண்பகல் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அதே இடத்தில் வைக்கப்பட்டு பௌத்த மத சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றன.
பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் மிரட்டலுக்கு பயந்தே அரசு இங்கு மீண்டும் புத்தர் சிலையை பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வைப்பதற்கு அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பித்ததாக பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரையின் வளாகத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன், அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவோடு இரவாக அந்தப் பகுதியில் பெயர்ப்பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் இடம்பெற்று வந்தன. இந்த சட்டவிரோத கட்டுமானப் பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனையும் பொருட்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை பகல் அங்கு புத்தர் சிலை வைக்க முயற்சித்தபோது பொலிஸாருக்கும் பௌத்த துறவிகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டு அங்கிருந்து புத்தர் சிலை பொலிஸாரால் பெரும் இழுபறிக்கு மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விகாரை உள்ள பகுதியில் ஏற்கனவே சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலையை அகற்றுவதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் கடந்த 4ஆம் திகதி நடவடிக்கை எடுத்த போதும் அந்த சட்டவிரோத கட்டடம் தொடர்பில் மாநகர சபையினால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினாலும் ஒரு வார கால அவகாசம், அந்த விகாரையின் விகாரதிபதியினால் பொலீசாரிடம் கேட்டிருத்தமைக்கு அமையவும் அதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஒரு நிரந்தர கட்டுமானங்களுக்குரிய பணிகள் இடம்பெற்று வந்தது. இதற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர சபை உள்ளிட்ட திணைக்களங்களிடம் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் அந்தப் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை பார்வையிடச் சென்ற ஊடகவியலாளர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் பணித்த போதிலும் அதனை பொருட்படுத்தாது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், அவ்விடத்துக்கு வந்த பொலிசார்,புத்தர் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்த போது, பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
அதில் பிக்கு ஒருவர் பொலிசாரின் கன்னத்தில் அறைந்ததை தொடர்ந்து அங்கு கைகலப்பான அதேவேளை,பெரும் பதற்றமான நிலைமை உருவானது. இந்நிலையில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன் பதற்ற நிலமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று காலை முதல் இது தொடர்பாக கடும் வாதாப் பிரதிவாதங்கள்
ஏற்பட்ட நிலையில், திருகோணமலை கோட்டை சம்போதி தாஹம் (அறநெறி) பாடசாலையின் சம்புத் ஜயந்தி விகாரை பகுதியில் அவசரமாக புத்தர்சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அங்கே பிரச்சினை எழுந்தது என்றும் மீண்டும் அந்த புத்தர் சிலையை அதே இடத்தில் பிரதிஸ்டை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மீண்டும் அவ்விடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் நேற்று திங்கட்கிழமை பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து அந்த புத்தர் சிலையை அதே இடத்தில் பெரும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைத்து பௌத்த மத சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றன.
![]()