பிக்குகளுக்கு தனிச் சட்டம் கிடையாது; அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இந்த நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு என்று பிறிதொரு சட்டம் கிடையாது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம் மற்றும் நீதியமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு என்று பிறிதொரு சட்டம் கிடையாது. அதேபோல் பௌத்த பிக்குகளுக்கு என்றும் பிறிதொரு சட்டம் கிடையாது.அனைவரும் பொதுச்சட்டத்துக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும்.
இனவாதம், வெறுப்பு பேச்சுகளுக்கு இடமளிக்க முடியாது. வடக்கு , தெற்கு, கிழக்கு என்று வேறுபாடின்றி அனைத்து இன மக்களையும் நாங்கள் ஒருமித்தே பார்க்கிறோம். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்.
வழக்குத் தொடுநர் அலுவலகம் பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்ட ஒருசில விடயங்களை ஏற்றுக்கொள்கிறோம். இந்த அலுவலகம் இந்த நாட்டில் இடம்பெற்ற சகல குற்றங்கள் குறித்தும் ஆராயும்.இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் பொறுப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட முடியும் என்றார்.
![]()