நாட்டில் குழப்ப நிலை ஏற்படலாம்; நாமல் எச்சரிக்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ..வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தேர்தல் வரவுள்ளது. இதற்காக இனவாத மோதல் அவசியம் என்று நினைத்தால் அது உங்களுடைய அரசியல் . ஆனால் இது இனவாத பிரச்சினையாகி நாட்டில் குழப்ப நிலைமை ஏற்படலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.யான நாமல் ராஜபக்ச எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு,வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் பேசுகையில்,
திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விகாரையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக அது அங்கிருந்து அகற்றப்பட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் இந்தச் சம்பவத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விகாரை 1951ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு 2004 இல் புனித பூமியாக அறிவிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்தின் பழைய அறநெறி பாடசாலையாக இருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு கலந்துரையாட வேண்டும். இதனை இனவாத பிரச்சினையாக்க வேண்டாம். இதனை இனவாத முறுகலாகவும் மாற்ற வேண்டாம். இந்த விடயத்தில் தலையிட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூறி, இருதரப்பையும் அழைத்து இது தொடர்பில் நியாயத்தை வழங்குங்கள்.
இல்லையென்றால் வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தேர்தல் வரவுள்ளது. இதற்காக இனவாத மோதல் அவசியம் என்று நினைத்தால் அது உங்களுடைய அரசியலாகும். ஆனால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்க்க வேண்டும். இவ்வாறானவற்றை நடக்க இடமளிக்க வேண்டாம். இதற்கு இடமளித்தால் இறுதியில் இது இனவாத பிரச்சினையாகி நாட்டில் குழப்ப நிலைமையொன்று ஏற்படலாம். இதனால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேவேளை பிக்குகள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()