தமிழ்நாடு கொந்தளித்தால் தமிழீழம் கிடைத்து விடாது; நீங்களே போராட வேண்டும் -திருமாவளவன் தெரிவிப்பு

தமிழ்நாடு கொந்தளித்தால் ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை கைவிட்டு ஈழத் தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் ஒரு தேசமாக ஒன்றுபட்டு தமிழர் பிரச்சினையை கையாள வேண்டும் என இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ் சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கார்த்திகை மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொல்.திருமாவளவன் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
எனக்கும் ஈழத் தமிழருக்குமான உறவு இன்று,நேற்று ஆரம்பித்ததல்ல. வன்னியை ஆண்ட அண்ணன் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டபோது எமது போராட்டத்தை சட்டத்துறை மாணவனாக ஆரம்பித்தேன்.
நான் அரசியலில் இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அண்ணன் பிரபாகரன். இனத்துக்கான அவருடைய போராட்டம் என்னை பொது வாழ்வியலுக்கு கொண்டு வந்தது.ஈழத் தமிழர்களுடைய அரசியல் வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது என்ற கருத்தை ஆணித்தரமாக கூற விரும்புகிறேன்.
தமிழ்நாடு கொந்தளித்தால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைத்து விடும் என சில ஈழத் தமிழ அரசியல்வாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அது நடக்காது. ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுக்கான ஈழத்தை பெற்று கொடுக்க நினைத்தால் அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும். அதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.
இந்திய பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் 545 பேர் உள்ளனர். அதில் தமிழ்நாடவர்கள் 40 பேர் மட்டுமே. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு சிறுபான்மையாக காணப்படுகிறார்களோ அவ்வாறே இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்நாடு சிறுபான்மையாக காணப்படுகிறது. தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்திய அரசியலமைப்பை மாற்றவோ,திருத்தவோ முடியாது.
இதனை ஏன் கூறுகிறேன் என்றால், அண்ணன் பிரபாகரன் எக்காலத்திலும் இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்த வரலாறுகள் இல்லை.
இந்தியாவில் அண்ணன் கைது செய்யப்பட்ட போது அவரிடம் கை துப்பாக்கியை பறித்தார்கள். அப்போது அண்ணன் கூறிய வார்த்தைகள், ‘நாங்கள் இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள் அல்ல பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானவர்கள். அதனால் தான் போராடுகிறோம்’ என்ற உண்மையை உரக்கச் சொன்னார்.
அவர் நினைத்திருந்தால் ஈழத்துக்கு திரும்பிய பின்னர் இந்திய அரசை சாடி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு சாடாமல் விட்டது,இந்தியா நினைத்தால் எமக்காக எதனையும் செய்யலாம் என்ற உணர்வு அவரிடம் இருந்தது.
அதேபோன்று இலங்கை-இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட போது இந்தியாவால் சிங்கள அரசாங்கத்திற்கு இரண்டு விடயங்கள் தெளிவாக உணர்த்தப்பட்டது. ஒன்று இந்தியா நினைத்தால் இலங்கை அரசியலமைப்பில் தான் நினைத்த தீர்வை அரசியலமைப்பாக்க(13ஆம் திருத்தம்) முடியும். இரண்டாவது விடயம் இந்தியா சொன்னால் புலிகள் எதிர்க்க மாட்டார்கள். இந்தியாவை அவர்கள் நம்புகிறார்கள் என்ற செய்தி உணர்த்தப்பட்டது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர்-அண்ணன் பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் மக்களை ஒன்றிணைக்கக் கூடிய தலைவர் ஒருவரை இனம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே தமிழ் மக்கள் தமக்கான தீர்வை நோக்கி நகர்வதற்கு ஒரு தேசமாக ஒரு தலைவரின் கீழ் அணி திரண்டால் மட்டுமே இந்தியா மற்றும் மேற்கு வல்லரசுகளின் நம்பிக்கையை பெறக் கூடியதாக இருக்கும் – என்றார்.
![]()
இலங்கைத் தமிழர்களை வழிநடத்த இந்தியத்தமிழர்களிடம் கைகட்டி நிற்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள்..திரு.தொல் .திருமாவளவன் எமக்கான நாணயக்கயிற்றை பிடிக்க வைத்த வெட்கம் கெட்ட தமிழர்கள்.
திரு.தொல்.திருமாவளவன் வந்து தமிழீழம் பற்றிப் பேசியுள்ளார்.திரு..அநுராவின் ஆட்சிக்கு தமிழர்கள் மெதுமெதுவாகக் கொடுத்த வரும் ஆதரவைச் சீர்குலைப்பதற்கென்று இந்தியா சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது..
அதில் ஒன்றுதான் திரு.தொல் .திருமாவளவன் வருகையும் ,இந்தியதுஇ தூதரை திரு.சுமந்திரனும் திரு.சாணக்கியனும் சந்தித்தமையம் ,தßpருகோணமலையில் புத்தர்சிலைக் களோபரமும்.
திரு.தொல்.திருமாவளவனைக் கூப்பிட்டு ஐயா எங்களுக்கு வழிகாட்டுங்கோ என்று சொல்ல அவரை அழைத்தவர்களுக்க மான ரோசம் சூடு சுரணை ஏதுமில்லையா.