தமிழக அரசின் மெளனம் ஈழத் தமிழருக்கு ஆபத்து; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இந்திய மத்திய அரசை சரியான நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவது மிக கடினம். அதை நாங்கள் உணர்கிறோம். அதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்களின் விவகாரம் இந்தியாவின் உள்வீட்டு பிரச்சினையாக மாறாமல் இருக்கும் வரை மத்திய அரசு இங்கிருக்கக்கூடிய தமிழ் தேசத்தின்
ஏற்றுக் கொள்ளக்கூடியஅரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்துவது கடினமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பேரவையினர் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை அரசாங்கம் தவறான பிரசாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டு விட்டதாகவும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளதாகவும் தங்கள் தீர்வையை தமிழ் மக்களும் ஏற்பதாக பிரசாரம் செய்து வரும் நெருக்கடி மிக்க காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுகிறது.
இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் போது நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட ஏக்ய ராஜ்ய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தி கூறிவருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பொது நிலைப்பாட்டுக்கு வந்து அறுதிப் பெரும்பான்மையை காட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நாம் பேச முயற்சித்தோம். அந்த முயற்சி சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக வந்த பிறகு முறிக்கப்பட்டது.
தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கும் தருணத்தில் தொல் திருமாவளவனுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.தமிழ் இனப்பிரச்சினைக்கு இந்திய நிலைப்பாடு முக்கியம். இந்திய -இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழ் மக்களின் தீர்வு சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக இலங்கை அரசை ஏற்க வைத்த ஒப்பந்தமாகும்.அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றிய 13ஆவது திருத்தம் என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுத்தது.
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை ஒற்றையாட்சிக்குள் 38 வருடங்களாக முடக்கப்பட்டு தமிழ் மக்கள் எந்த பலனையும் அடையாமல் இருக்கும் சூழலில் இந்தியா தவறான நிலைப்பாட்டை வலியுறுத்துவது எமக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா பலமாக உள்ளது.இந்தியாவுடன் இணைந்து போகாமல்
இலங்கையின் மிக மோசமாகியுள்ள பொருளாதாரத்தை மீள உயர்த்த முடியாத நிலை உள்ளது. இது இந்திய மத்திய அரசின் பேரம் பேசலுக்கான தன்மைகள் அதிகரித்துள்ளது. அதனை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.அந்த வகையில் தொல் திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவுபடுத்தினோம்.
அவர் தமிழக ஆட்சியில் முக்கிய பங்காளி. ஈழத்தமிழர் உரிமைகள் தொடர்பாக திமுக ஆட்சியில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பேசினோம்.ஈழத்தமிழர் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டைதமிழக அரசு எடுக்க வலியுறுத்துவதற்கு தொல் திருமாவளவன் அத்தியாவசியம்.
விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று வரை இன அழிப்புக்கு முகம் கொடுக்கிறோம். உயிர்கள் போகாவிட்டாலும் கூட தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி கொண்டு வருகிறது. பொருளாதார ரீதியிலும் தமிழ் தேசம் பலவீனப்பட்டுள்ளது.
போர் முடிவடைந்த பின்னர் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் தமிழக அரசு அமைதியாக இருப்பது ஈழத் தமிழர்களை பலவீனப்படுத்தி இன அழிப்புக்கு உள்ளாக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ் தேசிய பேரவை அணுக திட்டமிட்டுள்ளது.தமிழ் தேசம், இறைமையுடனான சமஷ்டியை கோர தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் வலியுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு அமைந்தது.
இன்று இருக்கக்கூடிய நிலைமையில் தமிழகத்தின் எந்தவொரு கட்சியும் செயற்பாட்டு நிலையில் ஈழத் தமிழர் விகாரத்தை கையில் எடுக்காது பேசாமல் இருப்பது தான் எங்களை பலவீனமாக வைத்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இங்கு தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதை வலியுறுத்தியும் ஒற்றையாட்சியை மறுக்கும் நிலைப்பாட்டையும் எடுத்திருந்தால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லை.மாறாக 2009க்கு பிறகு ஈழத் தமிழர்களின் விவகாரம் தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாலும் ஆக்கபூர்வமாக வலியுறுத்தப்படாமல் இருக்கிறது என்றார்.
![]()