21ஆம் திகதி போராட்டத்தில் அரசை கவிழ்க்கும் நோக்கம் இல்லை

நுகேகொடவில் 21ஆம் திகதி நடத்தும் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானதாக இருந்தாலும், அது அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்தை கொண்டதல்ல என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துற ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாசூ கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ஆம் திகதி நுகேகொடவில் நடத்தப்படவுள்ள எமது போரட்டம் தொடர்பில் கருத்தக்களை தெரிவித்து அரசாங்கமே பிரசாரங்களை செய்கின்றது. எங்களுக்கு பிரசாரம் செய்யும் செலவு மிச்சமாகியுள்ளது. இப்போது பாடசாலை பிள்ளைகளுக்குகூட இந்தப் போராட்டம் தொடர்பில் தெரியும். எவ்வாறாயினும் அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்காக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும், ஊழல் மோசடிகளை நிறுத்துமாறும் கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது.
குறிப்பாக இந்த போராட்டத்தின் நோக்கம் தவறான பாதையில் பயணிக்கும் அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கானதே தவிர, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்தை கொண்டதல்ல. அதேபோன்ற 2022இல் வன்முறைகள் மூலம் ஆட்சிகளை கைப்பற்றியது போன்று நாங்கள் நடந்துகொள்வதில்லை. பொறுமையாக இருந்து செயற்படுவதே எங்களின் எதிர்பார்ப்பாகும் அரசாங்கத்திற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருக்கின்றது. அதுவரையில் அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டுசெல்லவே நாங்கள் முயற்சிக்கின்றோம் என்றார்.
![]()