மாகாண சபைத் தேர்தலுக்கு நிதி; நடத்த சட்டமில்லை!

மாகாணசபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலை நடத்த சட்டமில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார் அரச தரப்பில் 159 பெரும்பான்மை உள்ளது. சட்ட திருத்தத்தை ஆளும் தரப்பு கொண்டு வந்தால், வாக்கெடுப்பு ஊடாக இந்த பிரச்சினைக்கு ஒரு நாளிலேயே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். .
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 4 ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் சகல வரவு- செலவுத் திட்டங்களையும் எதிர்த்தார்கள். ஆனால் இன்றைய எதிர்க்கட்சி அவ்வாறான மனநிலையில் இல்லை. சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மக்களை ஒன்றுத்திரட்டி வீதிக்கு இறங்கவில்லை.அரசாங்கத்தையோ,அரச நிர்வாகத்தையோ நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. சிறந்த விடயங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டு தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்புக்கு கிடையாது.
எதிர்க்கட்சியினர் என்ற அடிப்படையில் அரசாங்கத்துக்கு முழுமையான சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும். வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கைத் திட்டத்தில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளீர்கள்?. அதேபோல் 2025 வரவு செலவுத் திட்டத்தின் எத்தனை முன்மொழிவுகள் செயற்படுத்தப்பட்டன?
இன்று குறிப்பிடும் விடயங்களையா கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் குறிப்பிட்டீர்கள். இந்தியா பற்றி என்ன கொள்கையை கடைப்பிடித்தீர்கள், தற்போது என்ன கொள்கையில் இருக்கின்றீர்கள்?. காலத்துக்கு ஏற்றாட் போல் கொள்கைகயை மாற்றியுள்ளீர்கள்
மாகாணசபைத் தேர்தல் பற்றி தற்போது பேசப்படுகிறது. தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலை நடத்தும் சட்டமில்லை என்று ஜனாதிபதி கூறுகின்றார் . தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பது பெரிய விடயமல்ல, அரச தரப்பில் 159 பெரும்பான்மை உள்ளது. சட்ட திருத்தத்தை அரச தரப்பு கொண்டு வந்தால், வாக்கெடுப்பு ஊடாக இந்த பிரச்சினைக்கு ஒரு நாளிலேயே தீர்வு காண முடியும்.எனவே அதனை முதலில் செய்யுங்கள் என்றார்.
![]()