தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான தீர்வென்றால் சகல தமிழ் கட்சிகளும் ஒன்றுபடும்

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் நியாயமான, தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவதற்கு இன்றுவரை தயாரில்லை. இதுவே இனப்பிரச்சினை இலங்கையில் நீண்டு செல்வதற்கான காரணமெனத் புளொட் அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்கும், கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் அரசியற் தீர்வும் பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான சிறப்புக் கருத்துரையும் கலந்துரையாடலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.நகரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்க் கட்சிகளிடையே தீர்வு விடயத்தில் ஏதோ பெரிய வேற்றுமைகள் காணப்படுகின்றன,அதனால் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன என்ற அபிப்பிராயம் சிங்கள அரசியல் கட்சிகள், தலைமைகளால் பரப்பப்பட்டு வருகின்றன. அது உண்மையானதல்ல.
தமிழ்மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அரசாங்கம் செல்லுமாயின், அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாயின் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைக்கத் தயாராகவிருக்கின்றோம். எனினும், தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வை முன்வைப்பார்களா? என்பதே கேள்வியாகவுள்ளது.
முன்னர் நாங்கள் எல்லோருமே தமிழீழத்தைக் கேட்டே போராடினோம். விடுதலைப் புலிகளும் முழுமையாகத் தமிழீழத்தைக் கேட்டே போராடினார்கள்.அந்தக் கோரிக்கைக்கு மாறாக எம்மத்தியில் பெரியளவில் எவருமே செயற்படவில்லை.
1977 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் ஒற்றுமையாகத் தனிநாட்டுக்காக வாக்களித்தார்கள். அதற்குப் பின்னரும், முன்னரும் பெரும்பான்மையான தமிழ்மக்கள் சமஷ்டித் தீர்வையே ஏற்றுக் கொண்டார்கள்.தற்போதும் நாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோரி வருகின்றோம். இதுதொடர்பில் எங்களுக்குள் சிறுசிறு வேற்றுமைகள் காணப்படுகின்ற போதிலும் அதனை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள், அமைப்புக்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் போது தமிழ்க்கட்சிகள் தங்களுக்கிடையில் ஒற்றுமையில்லை என விசனம் தெரிவிப்பார்கள். தமிழ்மக்கள் தங்களுக்குள் பலமாகவிருப்பது முக்கியம். அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ்க் கட்சிகள் மத்தியில் பல விடயங்களில் பிரச்சினைகள் காணப்பட்டாலும் சில விடயங்களை நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவே முன்னெடுக்கின்றோம். ஈபிடிபி கட்சியின் மகுடவாசகமாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி காணப்படுகின்றது. தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்துமே இந்த விடயத்தையே வலியுறுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
![]()