வெட்கம் இருந்தால் பதவி விலகுங்கள்!; சம்பிக்க பாய்கிறார்

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அவர் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு ஊடக கண்காட்சியை மாத்திரம் நடத்துகிறது.பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற வகையில் தெரிவு செய்யப்பட்டார் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.இந்த நியமனத்தின் போது அரசியலமைப்பு பேரவைக்கும் பொய்யுரைக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோனை இந்த பதவிக்கு நியமிக்க வேண்டும்.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில், மோசடியாக பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பாராயின் ஆணைக்குழு எவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழலை இல்லாதொழிக்க சுயாதீனமாக செயற்படும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
![]()