‘பப்ஜி கேம்’க்கு அடிமை ; ஒரு கோடி ரூபா கடன் செலுத்தியும் ; யாழில் இளைஞன் எடுத்த மிக மோசமான முடிவு

‘பப்ஜி கேம்’ விளையாட்டுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். உரும்பிராய் வடக்கு உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்த இளைஞன் கைத் தொலைபேசியில் மாத்திரம் விளையாடப்படும் பப்ஜி எனப்படும் கேமிற்கு அடிமையாகியுள்ளார். இவர் மீற்றர் வட்டிக்குப் பணத்தைப் பெற்றுக் இந்த விளையாட்டுக்கு கட்டணத்தைச் செலுத்தி விளையாடி வந்துள்ளார். மீற்றர் வட்டிக்குக் கடனாகப் பெற்ற பணமானது வட்டியும், முதலுமாக ஒரு கோடி ரூபாவைத் தாண்டிய நிலையில் அவரது தாயார் காணியை விற்பனை செய்து அந்தக் கடனிலிருந்து அவரை மீட்டுள்ளார்.
எனினும் அதிலிருந்து திருந்தாத அவர் மீண்டும் அந்த கேம் விளையாடுவதற்காகத் தனது தாயாரிடம் ஐந்து லட்சம் ரூபா பணம் கேட்ட நிலையில் தாயார் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால், ஏற்பட்ட மன விரக்தியால் கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு உயிர்மாய்க்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை (29) அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதேவேளை, இவர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை மின்சார சபையின் ஊழியருமாவார்.
![]()