இலங்கை

வெங்காய விவசாயிகள் விடயத்தில் கோட்டாவின் வழியைப் பின்பற்றுகிறாரா அநுர?

நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் விசித்திரமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இங்கு, அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்படும் பெரிய வெங்காயத்தில் ஒரு கிலோவில் 8 வெங்காயங்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெங்காயமும் 125 கிராம் எடை கொண்டனவாகவும், பெரிய வெங்காயத்தின் விட்டம் கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசாங்கம் விதித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து நேற்று புதன்கிழமை கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட இந்த நிபந்தனைகளைப் பார்க்கும்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் தேங்காயின் சுற்றளவின் அடிப்படையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது நினைவுக்கு வருகிறது. அன்று இதை விமர்சித்து எதிர்க்கட்சியில் இருந்த மக்கள் விடுதலை முன்னணி தரப்பினர், இன்று அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு, கோட்டாபய ராஜபக்சவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விலைகளைத் தீர்மானிப்பது வேடிக்கையான விடயமாக அமைந்து காணப்படுகின்றன.

இந்த நிபந்தனைகளை நோக்குமிடத்து, பெரிய வெங்காயச் செய்கை விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்து கொள்வதை குறைக்கப் பயன்படுத்தப்படும் தந்திரமொன்றாகவே நாம் இதைப் பார்க்கிறோம். பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி விதிப்பதன் மூலம் உள்நாட்டு வெங்காயச் செய்கை விவசாயிகளுக்கு அதிக விலையைப் பெற்றுத் தருவோம் என அரசாங்கம் வீராப்பு பேசியது, என்றாலும் வரியை விதிக்கப்பதற்கு முன்பு, அரசாங்கத்துடன் தொடர்புடைய நட்புவட்டார கூட்டாளிகள் மூலம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து, அதனை களஞ்சியப்படுத்தி வைப்பதன் மூலம் இறக்குமதியாளர்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *