இலங்கை

தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் 

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார்.

பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகளவில் சுருக்குவலை, கணவாய் குழைகளை கடலில் போடுவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வடமராட்சி வடக்கு கடற்பரப்பை நம்பி இருக்கும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் தான் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் எம்மவர்கள் நடப்பதன் காரணமாகவே தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு உடந்தையாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எமது கடல் வளத்தை பாதுகாக்கும் அக்கறை இல்லாது போய்விட்டது.

இது விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது மெத்தனப்போக்கு மாற்றமின்றியே தொடர்ந்து வருகின்றது.

கடற்றொழில் அமைச்சராக தமிழர்கள் வந்தபின்னரே வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுபோயுள்ளது. தமிழ் அமைச்சர்களாக முன்னர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது சந்திரசேர் தரப்புகளின் அரசியல் ஆதிக்கம் சங்கங்கள் சமாசங்களுக்குள் ஊடுருவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த அரசியல் ஆதாயங்களுக்காக மீனவர் சமுதாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். சங்களில் பொறுப்புகளில் உள்ள பலர் மீனவ சமூதாயத்தின் நலன்களை கைவிட்டு சுயநல காரணங்களுக்காக இவ்வாறான தரப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். இதனால் சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாதுள்ளது.

தொடர்ச்சியாக கடற்றொழில் வருவாயேதும் இன்றி ஏமாற்றமாகி வருவதன் காரணமாக எமது இளைஞர் சமூகம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றமை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் எமது கடலிலே மீன்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.

தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரம் அங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டு வருகிறது. ஏதாவது தேர்தல் வந்தால் தமது அரசியல் நலன்களுக்காக அதனை பேசுவார்கள். மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுவதன் காரணமாகதான் தீர்வு காண்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களது கடலுக்குள் வராதீர்கள் என நாங்கள் வலியுறுத்துவது எவ்வாறு தவறாகும். ஆனால் அவ்வாறு நாங்கள் கூறுவது திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு வருகிறது.

1983 க்கு முன்னர் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்ததில்லை. கடல்வலய தடைச்சட்டம் காரணமாகவே இந்திய மீனவர்கள் வந்து எமது கடல் வளத்தை சுரண்டிச்சென்றனர்.

கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்றனர். அதனை முற்றுமுழுதாக தடுத்த நிறுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல்கொடுத்து செயற்படுவதற்கு எமது பிரதிநிதிகளும் தயாராக இல்லை. தத்தமது அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையில் தலையிடுவதோடு சரி. நிலையான தீர்வுக்காக ஒருவரும் துணைநிற்பதும் இல்லை, குரல்கொடுப்பதும் இல்லை. எமது பிரதிநிதிகளே இவ்வாறு இருப்பதன் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ளவர்களும் வடக்கு மீனவர் பிரச்சினையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டுவருதற்கு காரணமாக அமைகிறது.

சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதுதான் இன்று வடக்கு மீனவர்களாகிய எமது நிலை. எம்மிடையே உள்ள ஒற்றுமையீனமே இதற்கு காரணம். உடனடியாக மீனவர் சமுதாயம் விழிப்படைந்து ஒன்றுபட்டு தீவிரமாக போராட முன்வர வேண்டும். இல்லாவிடில் கடல் வளம் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் இல்லாமல் போகும் என அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *