இலங்கை

வெளிநாட்டு பொறிமுறையே மிக அவசியம் இனப்பிரச்சினை குறித்து எதுவுமே தெரியாத அரசு; தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்றது  

நாட்டில் இனங்களுக்கு இடையேயான பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட தெரியாத இன்றைய அரசு, தீர்வு தரும் என நம்புவது சாத்தியமற்ற ஒன்று என சுட்டிக்காட்டிய இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் யாழ். குரு முதல்வர் செல்வன், செம்மணி படுகொலைக்கான நீதி கிடைக்க மக்களாகிய நாமே முழுமையாக முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன அழிப்பு நடைபெற்றது என்பதற்கு செம்மணி மனிதப் புதைகுழி ஒரு சான்று. அரசாங்கம் உள்ளக பொறிமுறை மூலம் எல்லாவற்றையும் பார்க்கலாம் என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கிறோம்.

இந்த செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் உங்களுடைய குரல் எங்கே இருக்கிறது? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என அவர்களின் இரத்தம் கேள்வி கேட்கிறது. நாங்கள் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டியது கடமை. சமூக கடமை மட்டுமல்ல சமய கடமை.நாம் எல்லோரும் இணைந்து வந்திருக்கிறோம்.

இன அழிப்பு நடைபெற்றது என்பதற்கு இது ஒரு சான்று. ஜனநாயக ரீதியாக என்று சொன்னாலும் நீதிமன்றம் இயங்கிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலே இராணுவ மயமாக்கலுக்கு மத்தியில் இப்படிப்பட்ட இன அழிப்பு நடைபெற்று இருப்பது சம்பந்தமாக விசாரணை நடைபெறுவது முக்கியம். அந்த நீதி விரைவில் கிடைக்க வேண்டும். அடுத்த கட்டமாக விசாரணைகளுக்கு வெளிநாட்டிலிருந்து உரியவர்கள் வந்து இணங்கிச் செய்யும் போது தான் நீதி வரும் என்பதை நாங்கள் திரும்பவும் வலியுறுத்துகிறோம்.

இப்போது அரசாங்கம் உள்ளக பொறி முறை மூலம் எல்லாவற்றையும் பார்க்கலாம் என்று சொன்னாலும் அதில் நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கிறோம். நீதி கிடைக்கின்ற பொழுது தான் மாற்றம் பெறும்.

இனப்பிரச்சினை பற்றி ஒரு வார்த்தை கூட கதைக்காத இந்த அரசாங்கத்தை நம்புவது சரிவராது. ஆகவே இந்த வேளையில் நாங்கள் இங்கு கூடி வந்திருக்கிறோம் சமயத்தை கடந்து இனம்,மதம், மொழி கடந்து பாதிக்கப்பட்ட- கொல்லப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது முக்கியம். இதைப்போல தொடர்ந்து நாங்கள் பலவற்றைச் செய்ய வேண்டும். நீதிக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *