சுட்டுக் கொல்லப்பட்டவர் பாதாளக் குழுக் குற்றவாளி; எதிராக 6 வழக்குகள் உள்ளன

சுட்டுக்கொல்லப்பட்டுள்ள வெலிகம பிரதேச சபை தவிசாளரான லசந்த விக்கிரமசேகர மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் ஒரு பாதாளக் குழுக் குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை ஊடாகவே வெளியில் இருந்துள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/ 10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை மற்றும் (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தியிருந்தேன்.
வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைய இவர் மிதிகம லசா என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை ஊடாகவே வெளியில் இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்.
இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெறும்.
பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாள குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு கூற முடியும்?. வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
![]()