செவ்வந்தியின் கைதுக்கு அரசு ஊடக அனுசரணை; உதய கம்மம்பில கிண்டல்

பொலிஸ் அதிகாரி ஒலுகல, சேலை அணிந்து மாறு வேடத்தில் செவ்வந்தியை கைது செய்துள்ளதாக மக்கள் நினைக்கும் அளவுக்கு அரசாங்கம் ஊடக அனுசரணை வழங்கியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “இதற்கு முன்னரும் குடு சலிந்து, அரக்கட்டா, மாகந்துரே மதுஷ் போன்ற குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் எவ்வித ஊடக பிரபலம் வழங்கப்படவில்லை. நேபாளம் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டது. முதல் ஒலுகல செவ்வந்தி பக்கத்தில் அமர்ந்திருந்தது முதல் இலங்கை வரும் வரை அனைத்தையும் காண்பித்தனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் அடையாளம் காணப்பதற்கான அடையான அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் செவ்வந்தியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து விட்டனர்.
அதனால் இவரால் பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சியங்களுக்கு பெரும் தவறு நடந்துள்ளது. அரசாங்கத்தின் உறுப்பினர்களே இந்த குற்றவாளிகளை வர்ணிப்பதன் மூலம் சிறு பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
இவர்களை சிறுவர்கள் நாயகர்களாக நினைக்க கூடும். அதனால் அரசாங்கம் பாரிய தவறை செய்துள்ளது. திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் பெயர்களை கொண்டு அழைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சென்ற செவ்வந்தி
இதேவேளை கொலைக்கு பின்னர் செவ்வந்தியை இந்தியாவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்ட கும்பல்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அவரை இந்தியாவிற்கு கடத்துவற்கு உதவியதாகக் கூறப்படும் வடக்கைச் சேர்ந்த ஒரு மனித கடத்தல்காரர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் முன்னர் பல்வேறு குற்றவாளிகள் மற்றும் பிறரை சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மனித கடத்தல்காரருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் கெஹல்பத்தர பத்மேவால் வழங்கப்பட்டது என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, மே 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் படகுத்துறையில் இருந்து இஷாரா ஒரு சிறிய படகில், மேலும் மூன்று பேரின் பாதுகாப்பில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.
இஷாராவை இந்தியாவில் இறக்கிவிடப்பட்ட பிறகு, மூவரும் அதே படகில் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மூவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் இஷாராவை அனுப்பும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய முக்கிய மனித கடத்தல்காரர் கைது செய்யப்பட்ட பின்னரே அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு மூன்று பேருடன் ஒரு சிறிய படகில் கடல் கடந்து சென்றது மிகவும் பயங்கரமான அனுபவம் என்று இஷாரா கூறியதாக கூறப்படுகிறது.
படகு கவிழ்ந்து கடலில் மூழ்கிவிடுமோ என்ற பயத்தில் தான் அழுததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இஷாராவை கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் சென்று, இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் மறைந்திருந்த இரண்டு வீடுகளையும் சோதனை செய்துள்ளனர்.
இஷாரா தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நேரத்தில் மற்ற வீடு மூடப்பட்டிருந்ததாகவும், அங்கு யாரும் இல்லை என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அந்த வீட்டில் வசிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஷாரா நேற்று முன்தினம் குருநகர் படகுத்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினரால் அவர் வடக்குப் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இஷாரா நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.
![]()