இலங்கை

ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக அளித்த வாக்குறுதியே காரணம்!; சஞ்சீவ கொலை தொடர்பில் இஷாராவின் வாக்குமூலம்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணைகளின் போது, இஷாரா செவ்வந்தி என்ற பெண், ஐரோப்பிய நாட்டொன்றுக்கு செல்வது தான் தனது வாழ்நாள் கனவாக இருந்ததாகவும், அந்த கனவை நனவாக்குவதாக கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குறுதியின் பேரில் தான் கொலை சம்பவத்திற்கு உதவியாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கான தான் எந்த வகையான பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், தன்னை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்புவதாக கெஹெல்பத்தர பத்மே கூறிய வாக்குறுதியே தான் கொலைக்கு உதவியதற்கான காரணம் எனவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே தனது வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, இஷாராவுடன் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபருக்கு ரூபா 6.5 லட்சம் வழங்கி, போலி பயண ஆவணங்கள் தயாரித்து ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஷாரா செவ்வந்தி, ஐரோப்பிய நாட்டுக்கு செல்லும் கனவை அடிக்கடி பத்மேவிடம் பகிர்ந்ததாகவும், பத்மே தனது போதைப்பொருள் விற்பனைச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது செவ்வந்தியையும் பயன்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *