விஜய் எனும் அரசியல் பொம்மலாட்டப் பொம்மை… ஏலையா க.முருகதாசன்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே! என்பதாலோ ,அல்லது அங்கிள் ஸ்டாலின் என்பதாலோ அல்லது சிம் சார் என்று எள்ளல் செய்வதாலோ விஜய் அரசியல்வாதியாகிவிட முடியாது.
பல அரசியல்வாதிகள் அரசியலாளர்கர்களை நக்கலாக விளித்திருக்கிறார்கள் என்பதாலோ தானும் அவர்களுக்குச் சமனான அரசியல் தெரிந்தவன் என கற்பனையில் விஜய் மூழ்குபவரானால் அவர் தான் முட்டாள் என்பதைத் தானே அறியாதவர் என்பதாகும்:
அரசியல் என்பதும் அரசியலில்: ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் சாதாரண இலகுவான விடயமல்ல.
அரசியலை கல்வியியல் நிலையில் நின்று எக்கோணத்தில் பார்த்தாலும் அத்துறைகளிலெல்லாம் அரசியல் ஒரு பாடமாகவே இருக்கும்.
சில நடிகர்கள் தமது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பினைப் பார்த்து மகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்து உற்சாக மிகுதியால் தம்மை மறந்து புகழ்ப் போதையில் இருக்கையில்,அந்த நடிகரின் நண்பர்களும் அந்த நடிகரையே துதிப்பாடிக் கொண்டிருக்கும் வெகுஜன ஊடகங்களும் அந்த நடிகரிடம் உங்களுக்கு இலட்சக்கணக்காக இரசிகர்கள் இருக்கிறார்கள்,மக்கள் செல்வாக்கு இருக்கின்றது நீங்கள் தேர்தலில் நின்றால் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரே ஆகிவிடுவீர்கள் எனத் தொடர்ச்சியாக நடிகரிடம் சொல்லச் சொல்ல அவரும், அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போலவும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போலவும்,பொய்யைப் பலமுறை சொல்ல அது உண்மையாகிவிடுவது போல தொடரான இப்புகழ்பாடலால் அந்த நடிகர் மூளைச்சலவை செய்யப்பட்டு இசைவாக்கம் பெறத் தொடங்கிவிடுவர்.
இலக்கியம்,வரலாறு,கணிதம்,வேதியல்,இயற்பியல்,மருத்துவம்,பொறியியல் போல் அரசியலும் ஒரு கல்விக்கூறு உடையதேயாகும்.இன்று உலகக் கல்விக்கூடங்களில் அரசியல் விஞ்ஞானம் ஒரு பட்டப் படிப்பு.
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை சினிமாவைப் பார்த்துக் குதூகளிக்கிறார்கள்.சினிமாக் குதூகளிப்பு ஒரு போதும் அரசியலாகாது.
நடிகர் விஜய்,நடிப்பில் நடிகர் என்றால் அதுவும் அவரின் நடிப்பைச் சிலாகித்து இந்த இடத்தில் விஜயின் நடிப்பு அபாரம் என்று சொல்லும் அளவுக்கு அவரிடம் பாத்திரமாக மாறி நடிக்கும் நடிப்பு அறவே கிடையாது.
கனதியான,பல்வேறு சமூக மாந்தர்களின் குணங்களையோ,பல்வேறுபட்ட தொழில்களைச் செய்யும் மனிதர்களின் இயல்பையோ அவரால் அவரின் நடிப்பு மூலம் வெளிப்படுத்தவே முடியாது.
அவருக்கேற்ற,அவரின் உடல் தோற்றம்,முகமாற்றத்தைக் கொடுக்கக்கூடிய சினிமாக்களையே கதாசிரியரும் இயக்குனரும் வடிவமைக்கிறார்கள். நடிகர் விஜய் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் ஏன் இளந்தலைமுறையினரை கவருகின்றது என்பதை உளவியல் பார்வையாக இன்னொரு கட்டுரை எழுதவிருக்கிறேன்.அதனால் தமிழ்ச் சினிமாவில் கதாபாத்திரமாகவே மாறி பல ஆண்டுகள் கடந்தாலும் சில நடிகர்களின் நடிப்பைக் குறிப்பிட்டு சிலாகித்துப் பேசுகிறேமே அதில் ஒரு வீதமாவது நடிகர் விஜைப் பற்றிப் பேசப்படுகிறதா என்றால் இல்லவே இல்லை,அறவே இல்லை.
எனவே,நடிகர் விஜய் தான் அரசியலில் ஈடுபட வேண்டுமென ஆவலாதிப்பட்டதற்கு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்பதல்லக் காரணம்,மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவரின் மனதாழத்திலிருந்து வந்ததென்றால் அதனை அரசியல் மூலமாக முகப்படுத்திச் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை.
உதாரணமாக தமிழகத்தில் சென்னையை ஊடறுத்தப் பாயும் கூவம் நதி தமிழக அரசின் கவனிப்பாரற்ற செயலால் சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி வழிந்து சாக்கடைக் கூழ்போல நாற்றமடிக்கும் ஒரு நீர்த்தேக்கமாக மாறிவிட்டது.
நடிகர் விஜய் கூவம் நதியைச் சீரமைப்போம் எனதருமை இரசிகர்களே என அறைகூவல்விட்டு தனது வருவாயில் ஒருபங்கை முதன்முதலீடாக ஆரம்ப நிதியாக அதை மக்களுக்கு வெளிபடுத்தி மக்களிடமும் அவரவர் வசதிக்கேற்ப நிதிப் பங்களிப்பை கோரினால் தமிழக அரசும் விழுந்தடித்துக் கொண்டு அத்திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் அல்லது பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
இது எதுவுமில்லாமல் பதினைந்து வயதச் சிறுவனுக்கும் வாக்குரிமை இருக்குமோ,இருக்கலாம் என நினைத்துக் கொண்டு கதாநாயகியை வில்லன்கள் கட்டி வைத்துச் சித்திரவதை செய்யம் காட்சியில் அந்த வீட்டின் சுவரை ஒற்றைக் கையால் உடைத்து உடைத்த வேகத்திலேயே அங்கே நின்ற பத்துப் பேரை அடித்த காட்சியை கிறேனில் மெல்லிய கம்பி கட்டி தூக்கி பாய்தலை காட்ட கம்பி திரையில் தொழில்நுட்பத்தினூடாக நீக்க நான் வந்திடடேன்ல என்று இரண்டு கையையும் மேலே தூக்கி நான் வேற மாதிரி என்று சொல்ல தியேட்டரில் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் எழுவதைப் பார்த்து நான் வேற மாதிரி என்று விஜய் நினைப்பதும்,படம் எப்படி என்று தியேட்டருக்கு வெளியில் பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்க பதினைந்து வயதுப் பையன் தளபதின்னா சும்மாவா செம வேற லெவல் என்று சொல்ல அது காணொளிகளாக பரவ அதைப் பார்த்த நடிகர் விஜய் இனி நான்தான் அடுத்த முலமைச்சர் என்று தமிழக அரசியல் வரலாறே தெரியாமல் கற்பனைப் பால் குடிக்கிறார்.
திரு.ஈ.வே ராவில் ஆரம்பித்து திராவிடக் கழகம் என வளர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என வளர்ந்த 60 ஆண்களுக்கு மேலாகக் கிளைபரப்பி விழுதெறிந்து திடமாக எழுந்து நிற்கும் கட்சிகளில் ஒன்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.
முத்துவேல் கருணாநிதி என்று நக்கலாக எள்ளி நகையாடி பொது இடத்தில் பேசிய நடிகர் விஜய் ஒரு பண்பு கெட்டவர் என்பதை தமிழக மக்கள் இன்னுமா புரிந்து கொள்ளவில்லை.
ஏதிரியை விளிக்கும் போதுகூட மரியாதை கொடுத்து பண்பாகப் பேச வேண்டும் என்பது உலகளாவிய அரசியலாளர்களிடம் காணப்படும் அழகிய நாகரீகம். அந்த அடிப்படை அறிவுகூட இல்லாத நடிகர் விஜயை ஒரு சராசரி மனிதனாகக்கூட மதிக்க முடியவில்லை.
திமுகவிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தவறு இருந்திருக்கலாம்.இது திமுகாவில் மட்டுமல்ல பல நாடுகளில் உள்ள கட்சிகளில் தவறுகள் காலத்துக்குக் காலம் இருக்கவே செய்கின்றது.
திமுக எந்தளவு வலுவான இராஜதந்திரமுள்ள கட்சி என்பதற்கு 1967 இல் தமிழகத் தேர்தலில்,பல்கலைக் கழக மாணவனான திமுகாவைச் சேர்ந்த சிறீநிவாசன் என்பவரால் பலராலும் மதிக்கப்பட்ட பெருந்தலைவராக இருந்த திரு.காமராஜரை தோற்க்கடிக்கப்பட்டதை ஒரு பெரும் அரசியல் நிகழ்வாகவும் வரலாறாகவும் அன்று பேசப்பட்டது.
1967 ஆம் ஆண்டு என்பது தமிழக அரசியலை புரட்டிப் போட்ட ஆண்டென்றே அப்பொழுது பேசப்பட்டது.திரு.காமராஜர் தலைமையில் பல அபிவிருத்திகளைச் செய்த காங்கிரஸ் கட்சியின் வலிமையை மேடை தோறும் தனது பேச்சாலும் அரசியல் விவாதங்களாலும் தகர்ந்தெறிந்தது. படித்த மக்களுக்கான கட்சியும் திமுகாதான் பாமர மக்களுக்கான கட்சியும் திமுக தான் என மக்கள் அதனை ஆராதிக்குமளவிற்கு தமிழகத்தை அக்கட்சி சூழ்ந்து நின்றது.
காங்கிரஸ் கட்சி விட்ட தவறுகளை எடுத்தாளுவுதில் விவாதத்திற்கான விடயதானங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் வாதாடுவது போல வாதாடி விபரித்த விதம் கண்டு தமிழகமே வியந்து மகிழ்ந்து நின்றது.
அந்த ஆண்டு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகி திமுக அரசுப் பொறுப்பில் அமர்ந்தது.
எந்தக் கட்சி படித்தவர்களையும்,அறிவுபூர்வமாக படித்தத் தெளிந்து கொள்ள ஆர்வப்படும்
ஆசைப்படும் மக்களையும்,பாமர மக்களையும் உள்வாங்குகின்றதோ அந்தக் கட்சிகளை இலகுவாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றிவிட முடியாது.
நடிகர் விஜய் திமுகாவின் மிகப்பரந்த வரலாறு தெரியாதவராகவே இருக்கிறார்.முற்போக்குச் சிந்தனையும் மக்களை நேசிக்காத கட்சிகள் வெறும் பணத்தால் மக்களை அடிமைப்படுத்தி ஒருமுறை ஆட்சியைக் கைப்பற்றலாம்.ஆனால் அதனைத் தொடராகச் செய்யவே முடியயாது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கட்சிகள் சொல்லும் விடயத்தை மக்கள் கேட்பார்கள் அக்கட்சிக்கு ஆதரவளிப்பபார்கள்,ஆனால் அந்தக் கட்சி காலத்துக்குக் காலம் தனது சிந்தனைகளை மாற்றியமைக்காவிட்டால்,புதுப்பிக்காவிட்டால் அதில் பிழைகளைக் கவனித்துத் திருத்தம் கொண்டு வராவிட்டால் கட்சி சொன்னவற்றைக் கேட்ட,உள்வாங்கிய மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள்,அதனால் அந்தக் கட்சியைப் புறக்கணித்து விடுவார்கள்.
மக்களின் அறிவுத் தளத்தைத் தூண்டிவிட்டு,அந்த மக்களைச் சிந்திக்க வைத்தால் ஒரு சமூகத்தில் அறிவாந்த கட்சிக்குச் சமமாக மக்களும் அறிவார்ந்த மக்களாக சமநிலையில் இருப்பார்கள்.
இந்த நிலைதான் திமுகாவுக்கும் மக்களுக்குமான பிணைப்பாகவே இருந்தது இருக்கின்றது.இராஜதந்திரத்தைப ;பயன்படுத்தி; மக்கள் நலனுக்கான அறிவார்ந்த நகர்வுகளையும் திமுகா சமாந்தரமாகப் பேணியது.
திமுக இராஜதந்திரத்தை எவ்வாறு கடைப்பிடித்தது என்பதற்கு ஒரு விடயத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பொது மலசல கூடங்களில் அவற்றை ஆண்களுக்குரியவை பெண்களுக்குரியவை என்பதை வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஆணின் முகத்தையும் பெண்ணின் முகத்தையும் மலசலகூட முகப்பில் வரைந்திருத்ததை தேர்தல் பிரச்சார மேடைகளில் சுட்டிக்காட்டி பார்த்தீர்களா மக்களே தமிழக மக்கள் அறிவிலிகள் என்பதைக் காட்டவே காங்கிரஸ் ஆட்சி இப்படி படம் வரைந்துள்ளது என்று பேசினார்கள்.
திமுக பேச்சாளர்களின் தமிழ் உச்சரிப்பும் சொற்களைத் தமது குரலில் வடிவமைத்த விதமும் வித்தியாசமானது.அது தமிழக மக்களுக்குப் புதியது. கேட்போரின் காதுகளில்: அது புதுச் சுவையைக் கொடுத்தது.
பொது மலசல கூடங்களில் ஆண் பெண் படங்களை வரைந்துதான் வேறுபடுத்திக் காட்டப்படும் என்பது உலகளவில் பொதுநிலையாகும்.ஆனால் அதனை மக்களை முட்டாளாக்கும் செயல் எனத் திமுக வியூகம் அமைத்தது.அது அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தந்திரமேயாகும்.
இத்தந்திர முறை உலக நாடுகளில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.ஆட்சியிலிருக்கும் கட்சியின் பொருளதாரக் கொள்கையில் நிதி ஒழுங்கமைப்பில் அவற்றின்: அணுகுமுறை சரியாக இருந்த போதும் தாம் ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக நடைமுறை அரச திட்டங்களை மிக உன்னிப்பாக நுண்மையாக அவதானித்ததில் காணப்படும் மிக மிகச் சிறிய தவறைப் பெரிதாக்கி அதைச் சுட்டிக்காட்டிஇந்த அரசின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என அவர்களை மூளைச்சலவை செய்து நம்ப வைப்பதும் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மேல் அதிருப்தியை ஏற்படுத்துவதும் ஒருவித அரசியல்தந்திர அணுகுமுறையாகும்.
திமுக திரைப்படத்துக்கூடாகவும் மக்களை அணுகித் தமது கட்சியை வளர்த்தது.ஆனால் அத்திரைப்படங்கள் யாவும் திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்களில் தமிழகம் இருந்த நிலையையும்,அதை நிவர்த்தி செய்கின்ற வழிகளையும் சொல்லிய திரைப்படங்களாகும்.தமிழகத்தை ஆரியம் சமயவாதத்தை முன்னிறுத்தி,சமயப் பயம்காட்டி மக்களைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சித்தமையை திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது.பேரறிஞர் அண்ணா அவர்களால் ஆரிய மாயை என்ற நூலும்,சீறும் சிங்களத்துக்கு அபாய அறிவிப்பு என்ற நூலும் எழுதி வெளயிடப்பட்டது.
திமுகவின் முற்போக்குச் சிந்தனை காரணமாக தமிழகம் தாண்டி இலங்கைத் தமிழர்களையும் சென்றடைந்தது.திமுக வின் முற்போக்குச் செயல்பாடுகளை ஆதரித்த இலங்கைத் தமிழர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
இன்றளவும் பேசப்படும் திரைப்படங்களில் கலைஞர் திரு.மு.கருணாநிதியின் கதைவசனத்தில் தயாரிக்கப்பட்ட பராசக்தியும் மனோகராவும் அன்று அத்திரைப்படங்கள் திமுகவின் பிரச்சாரத் திரைப்படங்களாகவே பார்க்கப்பட்டன.
ஒரு காலகட்டத்தில் மக்களைத் தம்பக்கம் இழுக்க தமது ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட சில தந்திரங்களை திமுக மேற்கொண்டது.கட்சிகள் கொள்கைகளை வகுக்கும் போது தாம் கடைபிடிக்கும் சித்தாத்தங்களுக்கு அமைவாகவே கொள்கைளை வகுப்பினும் தமது ஆளுமையைச் செலுத்துவதற்காக சில தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள்.
திமுக திராவிட நாடு என்ற தாரக மந்திரத்தை கொள்கை உச்சரித்த போதிலும் தமிழ்மொழியே உலகில் உயரியது என்ற பிரசாரத்தையும் மேற்கொண்டனர்.
1967இல் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம,; அடுத்து நடந்த உலகத் தமிழராய்ச்சி அமைப்பின் இரண்டாமாண்டு நிகழ்வினை தமிழக அரசு நடத்திய போது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒழுங்கமைப்பதில் கலைஞர் அவர்களே முன்னின்று உழைத்தார்.
கலைஞர் அவர்களின் தமிழ் உச்சரிப்பு தனித்துவமானது,அழகானது கேட்போரை வசப்படுத்தும் அவரின் குரல்வளம் தமிழுக்குக் சுவை கொடுத்தது.
இலக்கிய ஒப்பீடுகளை அவர் எடுத்தாண்ட விதம் தமிழின வரலாற்றின் முக்கிய காலங்களை மிகைந்தளித்தன.
சென்னை நகரைச் சுற்றிவந்த தமிழினத்தின் பெருமையைப் பறைசாற்றும் சரித்திர ஆவண ஊர்திகள் அழகு சேர்ந்தன.தமிழக மண்ணுக்கு அது புதுசு,தமிழக மக்களுக்கு அது வியத்தகு விருந்து.
அந்த ஊர்திகளில் யானைகள் மூலம் சூடடிப்பது போல உருவச்சிலைகள் இருக்க அதற்கான விவரணத்தை கலைஞர் அவர்கள் கீழ்வருமாறு சொல்லுகிறாது மாடு கொண்டு போரடித்து மாளாது என்று யானை கொண்டு போராடித்த தமிழகம் என மிதமிஞ்சிய நெற்குவியல்களால் நிரம்பியது என உணவுப்பற்றாக்குறை இல்லாத தமிழர் வாழ்வியலைக் சுட்டிக் காட்டியது..
கலைஞர் அவர்களின் அரசியல் நுணுக்கப் பேச்சுக்களை இலக்கியச் சான்றுகளுடன் கூறியதைக் கேட்ட தமிழக மக்கள் திமுகவிற்குப் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.
ஆரிய எதிர்ப்பு,அறியாமையை உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துரைத்த அணுகுமுறை சீதனம் சாதியம் என்பவற்றுக்கு எதிராக வீறு கொண்டெழுந்த சொல்வீச்சுக்கள்,முரசொலிப் பத்திரிகை,திராவிட நாடு பத்திரிகை,முத்தாரம் சஞ்சிகை,கண்ணதாசனின் முல்லைப் சஞ்சிகை,பேரறிஞர் அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்ட கோம் லாண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகை என பகுத்தறிவு ஊடகங்கள் தமிழர்களைப் புடம் போடத் தெபாடங்கின.
பேரறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி, அன்பழக், நெடுஞ்செழியன், நடராஜன், ஈ.வி.கே.சம்பந்த, முரசொலி மாறன், சத்தியவாணி முத்து, மதியழகன் என அறிவார்ந்தவர்களின் உரைகள் தமிழர்களை விழிக்க வைத்தன.
இதுவரை காணாத ஆளுமை கொண்ட அறிவாளிகள் என தமிழக மக்கள் பேரானந்தம் கொண்டனர்.அறிவே எமது ஆயுதம் எனத் திமுக பறைசாற்றியது.
படித்தவர்கள் எனக் கொண்ட சென்னையும் அதன் புறநகர்ப் புகுதிகள்,இன்னும் ஆங்காங்கே உள்ள மாவட்டப் பகுதிகளில் திமுக செல்வாக்குப் பெற்றது.
ஆழ ஆணிவேரூன்றியும் பலமான பக்க வேர்களுடன் பரந்து நிற்கும் ஆலமரம் போல விஸ்வரூபமெடுத்த திமுக வின் வளர்ச்சி கண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ஜவர்கலால் நேரு தமிழகத்தில் அறிவுசார் புரட்சி ஆரம்பித்துவிட்டது என செய்வதறியாது திகைத்தார்.
இத்தகு வல்லமை கொண்ட கட்சியை,எல்லாமாக பெரியார் ஈ.வே.ரா அவர்களிடமிருந்து முகிழ்ந்த 60 ஆண்டுகள் இறுகி இறுகி வளர்ந்து கட்சியை ஆட்டி அசைக்கலாம் என்ற கனவுடன் பாஜக கட்சியின் உளவுச் சதிக் கொள்கையின் வழி அழிக்கலாம் எனக் கற்பனைப்பால் குடித்தவாறு விஜய் எதிர்க்கத் தொடங்கியது வேடிக்கையாகவே இருக்கின்றது.அரசியல் நடிப்பல்ல அது படிக்க வேண்டிய படிப்பு.
தமிழக மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதே நடிகர் விஜய்க்குத் தெரியவே தெரியாது.அரசியலில்: ஒருவரை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டுமென்றால் சவால்விட வேண்டுமென்றால் எதிராளியளவு அறிவுத் திறன் இருக்க வேண்டும்,தமிழர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.
பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் படிப்பிப்பவர் ஒரு பொருளியல் பட்டதாரியாக இருப்பதுகூட குறைந்த தகுதியே.பொருளாதாரத்தைப் படிப்பிப்பவர் அத்துறையில் கலாநிதியாக,அக்கல்வியின் மூலைடுக்கெல்லாம் அத்துப்படியான பொருளாதாரக் கல்வி விற்பன்னராக இருக்க வேண்டும்.
அத்தகு ஒரு அறிஞரால் மட்டுமே மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க முடியும்.
சினிமாவில் ஜன்னலை உடைத்து குதிப்பது போல தொழில்நுட்பத்துடன் காட்சியமைய,ஓடும் ரயிலுக்கு மேலால் பாய்வது போல காட்சியமைய விஜய் விண்ணாதி வின்னன்,புரட்சியாளன் எனத் தியேட்டரில் விசிலடித்து கைதட்டி ஆராவரம் செய்யும் இரசிகர்கள் வெறும் சினிமா இரசிகர்கள் மட்டுமே என்பதை உணராத விஜய் அவர்களை வைத்துக் கொண்டு தமிழக முதல்வருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாடம் புகட்ட வேண்டும் திமுகவை மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும் என்ற வன்மத்துடன் சூழ்ச்சியுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

தலைவன் எவ்வழியோ அவ்வழியேதான் தொண்டர்களும் என்பது போல அரசியலில் ஆகக் குறைந்தது அதில் அதன் அரிச்சுவடியே தெரியாத இரசிகர்களை,தொண்டர்களை என்னவென்று சொல்வது.
ரஜனிகாந்த அரசியலுக்கு வரப் போகிறார் என்ற போதுகூட விஜய்க்கு எழுந்த பகிரங்க எதிர்ப்புப் போல எழுந்ததில்லை.
விஜயின் அரசியல் ஆளுமை எத்தகையது, அவரின் அரசியல் அறிவின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதை அவரைத் தூண்டிவிட்ட பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தெரியும் அண்ணாமலைக்கும் தெரியும்.

இது திமுக விற்கும் தவெகாவுக்குமிடையில் நடக்கும் அரசியல் சமர்க்களம் அல்ல.இது திமுக விற்கும் பாஜாகாவிற்கும் இடையில் நடக்கும் அரசியல் போர்.
தமிழகத்தில் திமுக வை மிஞ்சிக் காலூண்ற முடியவில்லையே,எப்பாடு பட்டாவது வாக்குரிமை உள்ள விஜயின் இரசிகர்களை வைத்துத்தன்னும் திமுகவைச் சிதறடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விஜயைத் தனது அரசியல் வலையில் விழுத்தியுள்ளது பாஜக
இன்று விஜயின் நிலை சிலந்திவலைப் பூச்சிதான்.மூக்குப் போனாலும் சகுணம் பிழைக்கக்கூடாது என்பது போல எப்பாடுபட்டாவது தமிழக முதல்வராகிவிட வேண்டுமென்பது விஜயின் நப்பாசை எனும் அற்ப ஆசை.
கலைஞர் என்ற அரசியல் நுட்பவியலாளரின் பாசறையில் அரசியல் பயின்றவர் ஸ்டாலின்,அடுத்து உதயநிதி ஸ்டாலின்.
இரவு நித்hதிரைக்குப் போகும் வரை கலைஞரின் வீட்டு உறுப்பினர்களின் உரையாடல்களே அரசியல்தான்,அரசியல் மட்டுமேதான்அரசியல் தந்திரத்தில் கலைஞர் கலாநிதி.
அரசியலைச் சுவாசித்தும் சுவைத்தும் வளர்ந்த ஸ்டாலினின் அரசியல் தந்திரத்தை விஜயை அறியவே இல்லை.
இந்திய மாநிலங்களில் ஆட்சி நிர்வாகத்திலும்,அபிவிருத்தியிலும்அறிவுசார் செயல்பாட்டிலும் இந்திய மாநிலங்களுக்கே முன்னோடியும்,முன்மாதிரியும் தமிழ்நாடுதான்.
![]()
புதைகுழியில் கால் வைத்தது போல எடுப்பார் கைப்பிள்ளையாகி அரசியலே என்னவென்று தெரியாது சினிமா இரசிகர்களை நம்பி முதலமைச்சராக வேண்டுமென்ற பேராசையுடன் அரசியல் கற்றுக்கொள்ளாது திமுக விற்குப் பாடம் புகட்டுகிறேன் எனக் கால் வைத்த விஜய்க்கு அரசியலே ஆப்பாகப் போகின்றத.
பாஜாகாவின் சூழ்ச்சிப் பொறிக்குள் அவர் வசமாகவே மாட்டிக் கொண்டுவிட்டார்.விஜய் ஒரு பொம்மலாட்டப் பொம்மை.
![]()