இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 25 …. சங்கர சுப்பிரமணியன்


ஊரானூரான் தேசியப் பூங்காவை அடைந்தும் அந்த ஊரின் பெயர் என்னை ஈர்த்ததால் என்னை வான்கோழியாக மாற்றியது. என்னடா இவன் கோழிக்கறி வான்கோழி என்று கோழிப் பைத்தியமாகவே இருக்கிறானே என்று எண்ணாதீர்கள். கானமயிலாட கண்டிருந்த வான்கோழியாக என்னைச் சொல்கிறேன். வான்கோழியாக என்னைக் கூற காரணம் ஒன்றுள்ளது.
தமிழ் வேர்ச்சொல் அறிஞர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், தேவநேயப் பாவாணர்மற்றும் தற்போதைய ம. சோ. விக்டர் போன்றோர் வேர்ச்சொல்லாய்வு செய்ததைப்போல் நாமும் முயன்று பார்க்கலாமே என்ற நப்பாசைதான் அக்காரணம். மயிரைக்( மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் – வள்ளுவர்) கட்டி மலையை இழுப்பது போன்றதே என் முயற்சி.
மாசோ. விக்டர் சொல்லாய்வின்படி கிரேக்கர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் நில நடுக்கோட்டுன் கீழ் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு இருப்பதை அறிந்திருந்தார்கள். அந்த பகுதியை யாத்துரோ என்று சொன்னார்கள். யாத்துரோ என்ற கிரேக்க சொல்லுக்கு தென்பகுதி நிலம் என்று பொருள்.
யா என்ற சொல் தூய தமிழ்ச்சொல். “யா” என்ற சொல்லுக்கு தெற்கு என்று பொருள். “துரோ” என்பது தரை என்ற சொல்லின் திரிபு. யாத்துரே என்ற சொல் பிற்காலத்தில் ஆத்திரேலியா என்று மாறியிருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய நாட்டின் மூலச்சொல்லே தமிழாக இருக்கிறது. இதையே லத்தீன் மொழியில் சொல்லும்போது யாத்ரோ ஆஸ்ட்ரோவாக மாறுகிறது.
இந்த ஆஸ்ட்ரோ என்ற லத்தீன் சொல்லுக்கும் பொருள் தென்பகுதி என்றுதான் பொருள் என்று அவர் தன் ஆய்வில் விளக்கியுள்ளார்.
இதேபோல், ஊருணூரான் என்ற சொல்லை நான் ஆய்வுக்கு எடுத்தேன். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் பேசும் மொழிகளில் நிறையவே தமிற்சொற்கள் உள்ளதால் தமிழருக்கும் ஆஸ்திரேலிய வாழ் பழங்குடியினருக்கும் தொடர்புள்ளது என்பதை அறிய முடிகிறது.
தமிழர் ஊரின் பெயரைச் சொல்லி மனிதர்களை அழைப்பது வழக்கம். நான் பிறந்த ஊர் கீழப்பாவூர். என் தாத்தா ஊரில் தங்கி படித்தபோது அவ்வூரில் பெரும்பாலானோர் என்னை சங்கரா என்றோ மணி என்றோ அழைக்க மாட்டார்கள். மாறாக பாவூரான் என்றே அழைப்பார்கள்.
இதைப் போன்ற அதே ஊரில் இருந்த ஒருவருக்கு சுத்தமல்லி என்ற ஊரிலிருந்து பெண் எடுத்தார்கள். அந்த பெண்ணின் பெயர் கோமதி. ஆனால் அவளை அவ்வூர்ப் பெரியோர் எவரும் கோமதி என்று அழைத்து நான் பார்த்தாதில்லை. சுத்தமல்லியா என்றே அழைப்பார்கள். இதேபோல் நல்லூர்க்காரரை நல்லூரான் என்றும் கல்லூர்க்காரரை கல்லூரான் என்றே அழைப்பது வழக்கம்.
அதைப்போலவே இந்த ஊரூனூரானும் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? ஊருண் + ஊரான் என்பது ஊருணூரான் என்று ஆகியிருக்கலாம். “ஊருண் கேணி” என்றால்
பொதுவாக மக்கள் நீரை உண்பதற்கான
கிணறு. ஊருண் என்று மக்கள் அருந்த கூடிய
அத்தகைய நீருள்ள இடம்தான் ஊருணி. ஊருணி ஊரான் திரிந்து ஊரூணூரான் ஆகியிருக்கலாம்.
இப்படிக்கூட ஆகியிருக்கலாம். ஊருண் ஊருண் என்ற இரட்டைக்கிளவியாக இருந்து திரிபினால் ஊராணூரானக ஆகியிருக்கவும் வாய்ப்பு உள்ளதல்லவா? இப்போதும் சிலர் கேட்கலாம். ஊருணூரான் என்பது கல்லூர்க்காரன் நல்லூர்க்காரன் போல ஒரு ஆளின் பெயராகத்தானே இருக்கவேண்டும்? எப்படி ஒரு ஊரின் பெயராக இருக்கமுடியும்? என்று.
மாட்டிக் கொண்டாயா? யாரிடம் வந்து கதைவிடுகிறாய் என்று நெய்தடவி முறுக்கி விட்ட மீசையை மீண்டும் சிலர் முறுக்கி விடலாம். அவர்களுக்கு அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியதை சமர்ப்பிக்கிறேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் என் மூதாதையர்கள் என் கருத்துக்கு வலுசேர்க்கிறார்களே?
ஊரின் பெயர்களை ஆட்களுக்கும் வைத்திருக்கிறார்களே?
பழனி, சிதம்பரம் மற்றும் திருப்பதி என்றெல்லாம் ஊரின் பெயரை ஆட்களுக்கு வைத்திருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் முட்டையிலிருந்து கோழி வந்திருக்குமா? அல்லது கோழியிலிருந்து முட்டை வந்திருக்குமா?
என்னையா இது, இரட்டைக்கிளவி தமிழ் இலக்கணத்தில் இருக்கிறது. ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாட்டில் எங்காவது ஊர் பெயரில் இருக்கிறதா? என்று கேட்டு என்னை மூக்குடைத்து விட்டீர்கள். இப்போதும் உங்களிடமிருந்து நான் தப்பிக்கலாம். தொல்காப்பியன் தமிழுக்கு இலக்கணம் எழுதிய காலத்திலேயே அதாவது குமரிக் கண்டம் கடற்கோளில் மூழ்குவதற்கு முன்பே நம் மூதாதையர் இங்கு வந்திருக்கலாம்.
ஏனென்றால் கடற்கோள் நடப்பதற்கு முன்பே லெமோர் என்ற கிடத்தட்ட தேவாங்கு போன்ற தோற்றமுடைய பிராணி இந்தியாவிலும் வாழ்ந்ததற்குண்டான பாறைப்படிமங்கள் கிடைத்துள்ளன. மடகஸ்கார் போன்று நிலத்தொடர்பு ஆஸ்திரேலியாவுக்கும் இருந்ததால் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் ஆஸ்திரேலிய சென்றிருக்க வாய்ப்புள்ளதை மறுக்க முடியாதல்லவா?
அப்படி செல்லும்போது இலக்கண இரட்டைக்கிளவியும் அவர்களுடன் பயணித்திருக்கும். மற்ற இடங்களில் இலக்கியங்களோடு நின்றிருக்கும். ஆனால்
தமிழன் தன் பண்பாடுகளை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டான். இன்றைக்கும் நம் அண்ணாச்சி சுட சுட இட்லியை விறு விறுன்னு எடுத்துட்டுவா அம்புஜம் நேரமாகுது என்று சொல்லிக் கொண்டுதானே இருக்கிறார்.
ஊர்ப்பெயர்களில் நம்நாட்டில் வேண்டுமானால் இரட்டைக்கிளவி இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அதைப்பற்றி சரிவரத் தெரியாது. தெரியாமல் இருப்பதற்கும் மனித இயல்பே காரணம். அந்த இயல்பு இக்கரைக்கு அக்கரை பச்சை போன்றது. அதனால்தான் நாட்டில் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதை விட இங்கு ஆராயத் தொடங்கி விட்டேன்.
பிறந்த நாட்டில் இருக்கா இல்லையா என்று தெரியவில்லையாம் இவர் வாழப்போன நாட்டில் வக்கணையாய் ஆய்வில் இறங்குவாராம் என்கிறார் நம் அண்ணாச்சி. இப்படி நாமே நம் வாயினால் மாட்டிக் கொள்வோம். அதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்.
![]()