கட்டுரைகள்

தமிழ்நாட்டு அரசியல் திணறுகிறதா?… நியூசிலாந்து சிற்சபேசன்

செழுமையான காலகட்டமொன்றிலேயே தமிழ்நாடு காணப்படுகின்றது. சமூகநீதிக்கான குரல் ஓங்கிஒலித்த மண்ணிலே வாய்ப்புக்கள் வளமடைந்திருக்கின்றன. உழைத்தால் உயரலாம் என்னும் நிலை இயல்பாகியிருக்கின்றது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வலுவடைந்திருக்கின்றது. பொருளாதார வளர்ச்சி வேகமடைந்திருக்கின்றது.

அன்றொருகாலத்தில், தமிழ்நாட்டிலிருந்து பொருளாதாரவளம் தேடி பர்மா, மலேயா, பிஜி போன்ற தூரதேசங்களுக்கு ஓடினார்கள். இன்று, அசாம், மணிப்பூர், நேபாளம், பீகார் என விந்தியமலைக்கு அப்பாலிருந்தெல்லாம் பிழைப்புத்தேடி பலர் தமிழ்நாட்டிற்கு ஓடிவருகின்றனர்.

பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி முக்கியமான உந்துசக்தியாகும். தமிழ்நாட்டிலே 650க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இரண்டு லட்சம் வரையான பொறியியலாளர்கள் ஆண்டுதோறும் உருவாகின்றனர். ஐயாயிரம் வரையான கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. 80வரையான மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. 12,000 வரையிலான மருத்துவர்கள் ஆண்டுதோறும் தயாராகின்றனர்.

இந்தியாவிலேயே உச்சப்பட்சமான மருத்துவச்சேவை தமிழ்நாட்டிலேயே கிடைக்கின்றது. மூவாயிரம் வரையான அரச மருத்துவமனைகள் உள்ளன. பெருவாரியான தனியார் மருத்துவமனைகளும் காணப்படுகின்றன. மருத்துவச்சேவைகளின் தலைநகராகச் சென்னை கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து, மருத்துவ சிகிச்சைக்காக, நாளாந்தம் 100 வரையானோர் சென்னை வருவதாகச் சொல்லப்படுகின்றது.

போக்குவரத்து வசதிகள் மேம்பட்டிருக்கின்றன. பெருந்தெருக்கள், மேம்பாலம், “பைபாஸ்” என்று சொல்லக்கூடிய சனத்திரள் கூடிய பகுதிகளை எளிதில் கடக்கக்கூடிய சுற்றுப்பாதைகள் என்பவற்றுக்கு மகுடமாக மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துமே தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

இத்தகையவொரு சூழலிலேயே பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கின்றது.

வானைத்தொடத் துடிக்கும் ஒரு சமூகக் கட்டமைப்பு தமிழ்நாட்டில் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைகின்றது. ஆனால், அதனை தூரநோக்குடன் வழிநடாத்தக்கூடிய அரசியல்தலைமை காணப்படுகின்றதா என்ற கேள்வியை எளிதில் கடந்து போக முடியவில்லை.

Tamil Nadu

முன்னொரு காலத்தில், அரசியல் சித்தாந்தங்களின் நாற்றுமேடையாக தமிழ்நாடு அறியப்பட்டது. தற்போது, அரசியல் சித்தாந்தம் என்றால் “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பிராமண ஆதிக்கத்துக்கு எதிராகவும், சமூகநீதியை வலியுறுத்துவதுமான விழிப்புணர்வு சமூகமட்டத்தில் காணப்பட்டது. அதுவே தெளிவான இலக்கை அடையாளப்படுத்தியது. அதனால் அரசியல் சித்தாந்தம் வசப்பட்டது. அத்தகையதொரு பின்னணியிலேயே, சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) உருவாகியது.

அன்றையகாலத்தில், இந்திய தேசியக் காங்கிரஸ் வலுவான தரப்பாக அகில இந்திய அளவிலே காணப்பட்டது. அதற்கு வலுவான எதிர்த்தரப்பாக, சென்னை மாகாணத்தில், நீதிக்கட்சியே காணப்பட்டது.

சுமார் 13 ஆண்டுகள் சென்னை மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்தது. கொள்கை அடிப்படையிலே செயல்பட்டது. பல்வேறு காத்திரமான சமூக மாற்றங்களின் ஆரம்பப் புள்ளியாகியது.

1920ல் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

1921ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டது. அதன்மூலமாக, இட ஒதுக்கீடு முறையை ஏற்படுத்தியது. அதுவே, இந்திய சட்டவாக்கல் ஆட்சிமுறையில் முதன்முதலாக உருவாகிய இடஒதுக்கீடு ஏற்பாடாகும்.

Vijay sounds poll bugle: New force or just another player in Tamil Nadu  politics? | India News - The Times of India1925ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் நிறைவேற்றியது. அதுவே, இந்து ஆலயங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஆரம்பப்புள்ளியாகும்.

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தது.

1938ல் ஈ. வே. இராமசாமி நாயக்கர் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன்பின்னர், நீதிக்கட்சியிலே உட்கட்சிப்பூசல்கள் அதிகரித்தன. ஈ. வே. இராமசாமி நாயக்கர் வலுவடைந்தார். அதனால், நீதிக்கட்சியை 1944ல் திராவிடர் கழகமாக மாற்றியதோடு, தேர்தல்களில் போட்டியிடுவதையும் நிறுத்தினார்.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகமும், அதிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின.

1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சி அமைத்தது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். கொள்கைசார்ந்து செயற்பட்ட ஆட்சியாகியது.

சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது. அரசின் மொழிக் கொள்கையை அறிவித்தது. இருமொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஹிந்தி திணிப்பை நிராகரித்தது.

இவ்வாறாக, நீதிக்கட்சி தொடங்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் எம்ஜிஆர் வரையான திராவிடக் கட்சிகளின் காலகட்டம் காணப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகளில் தொய்வு ஆரம்பமாகியது. இருந்தாலும்கூட, முற்றிலுமாக விலகிவிடவில்லை. சமூகநீதி என்னும் சித்தாந்தம், தொட்டுக்கொள்ள ஊறுகாய்போன்றேனும், பயன்படுத்தப்பட்டது.

அதேவேளையில், கொள்கை கோட்பாடுகளிலிருந்து விலகி தனிநபர் துதிபாடும் கலாசாரம், கலைஞர் மற்றும் எம்ஜிஆர் காலகட்டங்களிலேயே ஆரம்பமாகியது. கட்சிகள், தனிநபர் கம்பெனிகளாக மாற்றமடையத் தொடங்கின.

From DMK To Vijay's TVK, How Tamil Nadu 2026 Polls Will Be A Game Changer  For Political Parties - Oneindia News

கலைஞர், எம்ஜிஆர் போன்றோரின் மறைவுக்குப் பின்னர் அரசியல் முற்றிலுமாக வர்த்தகமயமாகியது. அதனாலேயே, திமுக, அண்ணா திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதிகாரத்தை நோக்கியே ஓடுகின்றன. எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மருந்துக்கேனும் கொள்கை கிடையாது.

அதனாலேயே, சில்லறைத்தனமான நடவடிக்கைகளைக் காணமுடிகின்றது.

திராவிட “மொடல்” என “பிலிம்” காட்டுவதும். தமிழ்நாட்டை “தலைகுனிய விடமாட்டேன்” எனக் கோஷமிடுவதும், மருத்துவமனைக்கு வருகின்றவர்களை நோயாளிகள் என்பதற்கு பதிலாக மருத்துவப் பயனாளர்கள் என அழைக்கவேண்டும் என்று சொல்வதும் தமிழக முதலமைச்சரைக் “காமெடியனாக” ஆக்கிக்கொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கமல், சீமான், விஜய் வகையறாக்கள் வரையான அனைவருமே அரசியல் “காமெடியனாகவே” ஆசைப்படுகின்றனர்.

அதுவே தமிழ்நாட்டு அரசியல் திணறுகின்றமைக்கு சாட்சியாகின்றது.

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *