இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 24…. சங்கர சுப்பிரமணியன்


மறுநாள் காலை சீக்கிரமே எழவேண்டி இருந்ததாலும் களைப்பாலும் சீக்கிரமே நித்திரை கொண்டோம். மறநாள் ஊரூனூரான் தேசிய பூங்காவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். இந்த தேசிய பூங்கா உலக பாரம்பரிய பகுதியாக பாதுகாக்கப் படுகிறது. இப்பூங்காவிலுள்ள பார்டில் ப்ரேரே மலையின் தென்பகுதியில் ஜோஸப்பின் அருவி என்னும் அருவி இயற்கையழகு சூழ்ந்த மலையிலிருந்து கொட்டுகிறது.
கடல்மட்டத்திலிருத்து 630 அடிக்கு மேலுள் அதெர்டன் மேட்டுச் சமவெளயிலிருந்து இந்த அருவி கொட்டுவதைப் பார்க்க மிகவும் அழகாகவுள்ளது. கேன்ஸிலிருந்து 75 கி. மீ. தொலைவில் உள்ள ஊரூனூரான் தேசிய பூங்காவுக்கு A1 புரூஸ் நெடுஞ்சாலை வழியாக சுமார் இரண்டு மணிநேரம் சிற்றூர்தியில் பயணம் செய்யவேண்டும்.
நாங்கள் கேன்ஸில் தங்கியிருந்த விடுதியில் இருந்து ஏழரை மணிக்கே கிளம்பியதால் காலை சிற்றுண்டியை வழியில் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அப்படி செல்லும்போது வழியில் மெக்டொனால்ட் உணவகத்தைப் பார்த்த சிறுவர்கள் கூக்குரல் எழுப்பவே அங்கேயே எல்லோரும் காலை உணவை முடித்தவுடன் பயணத்தை தொடர்ந்தோம்.
ஊரூனூரான் தேசியப் பூங்காவை அடைந்ததும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் அமைக்கப் பட்டிருக்கும் நடைபாதை வழியாக 700 மீட்டர் நடந்து சென்றால் ஜோஸப்பின் அருவியை அடையலாம். ஜோசப்பின் அருவி என்ற பெயர்ப்பலகையை பார்த்ததும் எனக்குள் இன்னொரு சிந்தனையும் ஓடியது.
ஊர்ப்பெயர் ஊரூணூரான் என்ற அழகான தமிழ்ப் பெயர். அங்கிருக்கும் அருவிமட்டும் ஜோசப்பின் அருவியா? எங்கேயே இடிக்கிறதே? ஆஸ்திரேலிய வாழ் பழங்குடி மக்களுக்கு முன்னரே வெள்ளையர்கள் அங்கு வந்த விட்டார்களா என்ன? அப்படி வந்ததாக வரலாறு ஏதும் இல்லையே.
ஒருவேளை அவர்கள் பழங்குடியினருக்கு முன்னரே இருக்கிறார்கள் என்று ஒரு கூற்றுக்காக வைத்துக் கொண்டாலும் அவர்கள் ஊரூணூரான் என்றா அந்த இடத்திற்கு பெயர் வைத்திருப்பார்கள். ஜார்ஜ்டவுன், கிளேடன் போன்ற பெயர்களை அல்லவா வைத்திருப்பார்கள்.
எனவே அந்த அருவியின் பெயர் வேறாக இருந்திருக்கலாம். எப்படி தெரியுமா? ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிடிப்பதற்கு
முன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இணைப்பு பாலம்போல் தென்படும் திட்டுக்களை ராமன் கட்டியதாக இராமர் பாலம் என்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பிடித்தபின் ஆடாம் பிரிட்ஜ் ஆனது. இப்போது திரும்பவும் ராமர் பாலம் ஆகிவிட்டது.
இதேபோல் ஜோஜப்பின் அருவிக்கும் வேறு பெயர் இருந்திருக்கலாம் அல்லவா? ஆங்கிலேயர்கள் வந்தபின் அருவியின் பெயரை மாற்றியிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்திருந்தால் அது என்ன பெயராக இருந்திருக்கும்?
நான் சொல்லப் போவது ஒரு ஊகம்தான். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இந்தியாவின் தென்பகுதிகளில் இருந்து நிலம் பிளவு படாதிருந்த காலத்தில் வந்திருக்கலாம். அதை உறுதிசெய்யும் வகையில் அவர்களின் மரபணுக்கள், சில பண்பாடுகள் மற்றும் அவர்களது மொழிகளில் காணப்படும் தமிற்சொற்கள் போன்றவை காணப்படுகின்றன.
இனி அருவியின் பெயரை ஊகிக்கலாம் வாருங்கள். தமிழர் தம்மோடு வாழ்ந்து மடிந்தவர்களை பல காரணங்களால் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். அவர்களில் காத்தவராயன், பெரியகருப்பன், சுடலைமாடன், பேச்சி, இசக்கி போன்றோர்கள் அடக்கம். இசக்கியம்மன் வழிபாடு இன்னும் தமிழகத்தில் உள்ளது.
இந்த இசக்கி ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர்களோடு வந்து பின் திரிந்து இசப்பி என்றும் மாறியிருக்கலாம். பழங்குடியினர் ஊரூணூரானிலுள்ள அருவியை இசப்பி அருவி என்றும் அழைத்திருக்க வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர்கள் வருகைக்குபிறகு இசப்பி அருவியை ஜோஜப்பின் ஃபால்ஸ் என்று மாற்றியிருக்கலாம்.
இப்படி மாற்றுவது ஆங்கிலேயர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அது அவர்களுக்கு கைவந்த கலை. கன்னியாகுமரியை கேப்கொமரின் என்றும் யாழ்ப்பாணத்தை ஜாப்னா என்றும் மாற்றியவர்கள் ஏன் இசப்பி அருவியை ஜோசப்பின் ஃபால்ஸ் என்று மாற்றியிருக்க கூடாது.
அடுத்ததாக அருவியைப்பற்றி பார்ப்போம். அருவிக்கு செல்ல எழுநூறு மீட்டர் காட்டுக்குள் நடந்து செல்லவேண்டும். எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதற்காக சாலையில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்துள்ளார்கள். அந்த அறிவிப்பு பலகை காட்டும் வழியில் பயணிக்க இருவர் நடந்து போகக் கூடிய அளவில் பாதை அமைத்திருக்கிறார்கள்.
இப்பாதை வழியாக நடந்து சென்றால் அருவியை அடையலாம். காட்டுக்குள் வளைவாகவும் ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது பாதை. சற்று கடினம் என்றாலும் வயதானர்கூட சமாளித்து நடக்கலாம். பலவிதமான பறவைகள் பசுமையாக வானுயர்ந்து நிற்கும் பலவிதமான மரங்களும் செடிகளும் கண்ணுக்கு விருந்தளித்தது.
சுத்தமான இயற்கைக் காற்று அழகான சூழ்நிலை என மனம் மகிழ்ச்சியாக இருந்ததால் நடப்பதொன்றும் கடினமாகத் தெரியவில்லை. அருவிக்கு சென்றதும் திருநெல்வேலியிலுள்ள குற்றால அருவிக்கு வந்ததுபோல் இருந்தது. எல்லோரும் திருநல்வேலி, மதுரை, நாகர்கோவிலைச் சேர்ந்த உறவினர்களாக இருந்ததால் குற்றால அருவிபோல் தெரிந்ததில் எந்த வியப்புமில்லை.
ஊரூனூரான் ஊரையும் ஜோசப்பின் ஃபால்ஸையுமே நமது ஊர் போலவும் குற்றால
அருவியாகவும் நினைக்கும்போது வியப்பு எப்படி வரும். வேறுபாடு என்னவென்றால் குரங்குகள் இல்லை. குற்றால அருவிபோல் இருந்தாலும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அமைதியைக் காணமுடிந்தது. மாசுபடாத சூழ்நிலை இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கிறது.
குற்றாலத்தில் குளிப்பது போல் நேரடியாக அருவி விழும் இடத்திலேயே அருவிக்கு கீழாக நின்று குளிக்க முடியாது. ஆனால்
மிகவும் கவனமாக பாறைகளின் இடுக்குகளின் வழியாக கடந்து சென்றால் அருவியிலிருந்து கொட்டும் நீர் வந்து தடாகம்போல் சேரும் இடத்தில் நீந்திக் குளித்து மகிழலாம்.
![]()