கட்டுரைகள்

சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 41 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

தமிழ் அரசியல் கட்சிகள் ‘தனித்தவில்’ அடிப்பதால் எதுவுமே ஆகாது.

அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியது தொடர்பாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக்கோரிக்கைக்கு எதிராக ’38 வருடம் நடைமுறைப்படுத்தப்படாத அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி தற்போது அமுல்படுத்துமாறு கோருவது ‘ஏக்கியராஜ்ய’ என்ற ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை முடக்குவதற்காகவே’ என யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 38 வருடங்களாக 13-ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லையென்றால் அதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட அவரும் (கஜேந்திரகுமாரும்) அவருடைய கட்சியும் உள்ளடங்கிய தமிழர்தம் அரசியல் தரப்புத்தானே பிரதான காரணம் என்பதைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மூடிமறைத்துப் பேசுகிறார்.

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கடந்த 38 வருடங்களாகத் தமிழரசுக் கட்சி அர்ப்பணிப்புடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செயற்படவில்லையென்பது வேறு விடயம். ஆனால், தற்போதைய அரசியல் களநிலையில் 13ஆம் திருத்தத்தை விட்டால் தமிழ் மக்களுக்கு வேறு மாற்றுவழியில்லையெனும் சூழலில் தமிழரசுக் கட்சித் தலைவர் சிவஞானத்தின் கோரிக்கை அரசியல் யதார்த்தமானது.

அதனை எதிர்ப்பதானது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் சூனியத்தின் வெளிப்பாடே தவிர வேறல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் பெயர்ப் பலகையை அல்லது முகமூடியை மாட்டிக்கொண்டு ‘இருதேசம்; ஒரு நாடு’ எனும் அரசியல் கோஷத்துடனும் ‘சமஸ்டி’ அரசியலமைப்புக் கோரிக்கையுடனும் முன்னுக்குப் பின் முரணான ஒருவித முரண்பாட்டு அரசியலையே முன்னெடுத்துவருகிறார்.

தேர்தல்கள் ஆணைக் குழுவின் விதிமுறைகளுக்கமைய அவருடைய கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்ல.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஒரு கேள்வி?

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தற்போது நடைமுறையிலுள்ள அமைப்பு விதிகளில் இலங்கையின் இன பிரச்சனைக்குத் தீர்வாக சமஸ்டியை முன்வைக்கும் ‘ஷரத்து’ (விதி) உள்ளதா? ஆனால், தமிழரசுக் கட்சியின் அமைப்பு விதிகளில் பெயரளவிலேனும் ‘சமஸ்டி’ பற்றிய ‘ஷரத்து’ அதன் அமைப்பு விதிகளில் உள்ளது.

இந்தப் பின்னணியில் தர்க்கரீதியாகப் பார்க்கும்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெறுமனே வார்த்தை அலங்காரங்களால் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலைத்தான் முன்னெடுத்து வருகிறார். இதன் அர்த்தம் தமிழரசுக் கட்சி ஏதோ ‘திறம்’ என்றும் ஆகிவிடாது.
இலங்கையின் தற்போதைய அரசியல் அரங்கிலே ‘சமஸ்டி’ என்பது சாத்தியமாதல் அரிது.

இந்த நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் ஆளுக்காள் சேறடிப்பதை நிறுத்திக்கொண்டு -ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதையும் குறை கூறுவதையும் நிறுத்திக் கொண்டு 13- ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் களவேலைகளை முடுக்கிவிடுவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடியதே தவிர அதனை விடுத்து மாயமான் போன்ற கற்பனாவாதக் கோரிக்கைகளை அரைத்த மாவை மீண்டும் அரைப்பதுபோல் முன்வைப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் எதிர்காலத்தில் அரசியல் சூனியத்திற்குள்தான் தள்ளிவிடும்.

தமிழ் மக்களுடைய அரசியல் பொதுவெளியில் அதிகுறைந்தபட்சம் 13ஆம் திருத்தத்தின் அமுலாக்கத்தை உண்மையாகவே அரசியலில் விருப்புடன் எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் 13ஆம் திருத்தத்தை அமுல் செய்யக்கோரும் ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனைவிடுத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தவில் அடிப்பதால் எதுவுமே ஆகாது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *